வியாபாரியை கார் ஏற்றி கொல்ல முயன்ற அ.தி.மு.க., நிர்வாகி கைது
திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே வியாபாரியை கார் ஏற்றி கொல்ல முயன்ற, அ.தி.மு.க., நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம் கந்திலியை அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., முன்னாள் கந்திலி ஒன்றிய துணை சேர்மன், பூபதி, 70; அதே பகுதியை சேர்ந்த, அ.தி.மு.க., இளைஞர் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய துணைத்தலைவர் நந்தகுமார், 32; இருவருக்கும் நிலத்தகராறில் முன்விரோதம் இருந்தது. பூபதியின் மருமகன் அதே பகுதியை சேர்ந்த நெல் வியாபாரி சண்முகம், 45; பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சென்ற சண்முகத்தை, நந்தகுமார் வழிமறித்து, 'உன் மாமனாரை ஒழுங்காக இருக்கச்சொல்; என் விஷயத்தில் தலையிட வேண்டாம் ' எனக்கூறியுள்ளார்.
அப்போது சண்முகம், 'எனக்கும் அந்த பிரச்னைக்கும் சம்பந்தமில்லை. என்னிடம் எதற்கு தகராறு செய்கிறீர்கள்? ' என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார், பைக்குடன் நின்ற சண்முகம் மீது, காரை ஏற்றியதில் பலத்த காயமடைந்தார். நந்தகுமாரை கந்திலி போலீசார் நேற்று கைது செய்தனர்.