டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

4


- டில்லி சிறப்பு நிருபர் -:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, 'டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம்' மக்களின் தனியுரிமையைப் பாதிக்கும் வகையில் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டத்தை, 2023ல் மத்திய அரசு கொண்டு வந்தது. இதற்கு எதிராக பத்திரிகையாளர் கீதா சேஷு உட்பட சமூக ஆர்வலர்கள், பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.


அதிகாரம்



இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் முன்வைத்த வாதம்:

மக்களின் அடிப்படை உரிமையான தனியுரிமையை இந்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வீரியத்தைக் குறைக்கிறது.

தரவு பாதுகாப்பு வாரியத்தின் உறுப்பினர்களை நியமிப்பதில் அரசுக்கு அதிக அதிகாரம் உள்ளது. இது, வாரியத்தின் சுதந்திரமான செயல்பாட்டை பாதிக்கும்.

மேலும், பொது நலனுக்காக எந்த விதமான தகவல்களையும் அரசு சேகரிக்கலாம் என்ற ஒரு விதிமுறை உள்ளது. இதுதான் உண்மையான சிக்கலை ஏற்படுத்துகிறது. காரணம், எது பொதுநலன் சார்ந்த தரவுகள் என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் இல்லை.

எனவே, அரசு நினைத்தால் யாரிடமிருந்து வேண்டுமானாலும், எந்த தரவுகளையும் அவர்களுக்கு தெரியாமலேயே கூட பெற முடியும். இது, தனி நபர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.


உத்தரவு



புதிய சட்டத்தில் உள்ள ஷரத்துக்கள்படி, வெளிநாடுகளில் இருந்துகூட நம் நாட்டின் தரவுகளை கையாளக்கூடிய சூழல் உள்ளது.
இது, நாட்டின் இறையாண்மை சார்ந்தது. இதில் உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கை பொறுத்தவரை தனி நபர்களின் தரவுகள் என்றால் என்ன? பொது தரவுகள் என்றால் என்ன? என்ற வித்தியாசத்தை பார்க்க வேண்டி உள்ளது.

அதே நேரத்தில், ஒரு தனி நபர் அரசு அலுவலராக இருந்தால், அவர் சார்ந்த தரவுகளை எப்படி அழைக்க வேண்டும்?

இப்படி பல சிக்கல் நிறைந்த கேள்விகள் எழுகின்றன. தனி உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கும் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது.

இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement