மாதம் ரூ.1.30 லட்சம் மாமூல் வசூலிக்கும் இருவர் அணி!

5

பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''ஈயடிச்சான் காப்பின்னு கிண்டல் பண்றாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''யாரை சொல்றீங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய், சமீபத்துல சில தேர்தல் வாக்குறுதிகளை அறிவிச்சாருல்ல... எல்லாமே, தி.மு.க., - அ.தி.மு.க.,வின் திட்டங்களாம் பா...

''அதாவது, 'தி.மு.க., அரசின் மகளிர் உரிமைத்தொகையை, உதவித்தொகைன்னும், விடியல் பேருந்து திட்டத்தை, வெற்றி பயணம்னும், தமிழ் புதல்வன் திட்டத்தை, காமராஜர் கல்வி திட்டம்னும் பெயரை மாத்திட்டாரு... அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை, அண்ணன் சீர் திட்டம்னு அறிவிச்சிருக்காரு'ன்னு சமூக வலைதளங்கள்ல, அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் பட்டியல் போட்டுட்டு இருக்காங்க பா...

''அதோட, 'சினிமாவுல தான் அடுத்தவங்க எழுதி தர்ற வசனத்தை பேசினார்னு பார்த்தா, அரசியல்லயும் சொந்தமா யோசிக்காம, மத்தவங்க திட்டங்களை காப்பி அடிச்சிருக்காரே'ன்னு கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.

''சென்னையில், ரெண்டு தொகுதியாவது எதிர்பார்க்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு 2021ல் ஒதுக்கிய ஆறு சீட்களை இப்பவும் ஒதுக்க முன்வந்திருக்கா... ஆனா, அவா 10 சீட்களுக்கு மேல கேக்கறா ஓய்...

''சென்னை, திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியில், துணை முதல்வர் உதயநிதியை எதிர்க்க, தென்சென்னை மாவட்ட த.மா.கா., தலைவர் நந்து தயாரா இருக்கார்... இவர், திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் என்பதால, 'உதயநிதிக்கு கடும் போட்டியை தருவேன்'னு வாசனிடம் சொல்லியிருக்காராம் ஓய்...

''அதேபோல, வேளச்சேரி தொகுதிக்கு கட்சியின் பொதுச் செயலர், ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் எழும்பூர், திரு.வி.க., நகர் தொகுதிகளுக்கும் நிறைய பேர் விருப்ப மனு குடுத்திருக்கா... இதனால, 'சென்னையில் ரெண்டு சீட்டாவது தரணும்'னு அ.தி.மு.க.,விடம் கேட்க திட்டமிட்டிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''மாசத்துக்கு, 1.30 லட்சம் ரூபாய் வசூல் பண்ணுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''செங்கல்பட்டு தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள்ள, 60 பழைய இரும்பு கடைகள் இருக்கு... பல்வேறு பகுதிகள்ல திருடப்படும் இரும்பு, செம்பு, அலுமினிய பொருட்களை பல கடைகள்ல வாங்குதாவ வே...

''இதை கண்டுக்காம இருக்க, ரெண்டு போலீசார் சேர்ந்து, இந்த இரும்பு கடைகள்ல ஒரு மாசத்துக்கு மொத்தமா, 1.30 லட்சம் ரூபாய் மாமூல் வாங்குதாவ... ஸ்டேஷன்ல தினமும் நடக்கிற செலவுகளை இவங்க தான் செய்யுதாவ... மீதி தொகையை ரெண்டு பேரும் எடுத்துக்கிடுதாவ வே...

''இதேபோல, தனியார் பராமரிக்கிற பரனுார் சுங்கச்சாவடி தரப்புல, இந்த ஸ்டேஷனுக்கு மாதாந்திர மாமூல் குடுத்துட்டு இருந்தாவ... சில மாசங்களுக்கு முன்னாடி, செங்கல்பட்டு டி.எஸ்.பி., எச்சரிக்கை விடுத்து, மாமூல் வசூலை நிறுத்திட்டாரு வே...

''ஆனா, வாங்கிய கைகள் சும்மா இருக்குமா... இரும்பு கடை மாமூல் கூட்டணியில் இருக்கிற ஒரு போலீஸ்காரர், சுங்கச்சாவடிக்கே சிவப்பு கார்ல போய், பணத்தை வசூல் பண்ணிடுதாரு... இதுல, ஸ்டேஷன் அதிகாரிகளுக்கு மட்டும் பங்கு குடுத்துட்டு, மீதத்தை எடுத்துக்கிடுதாரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''பிரேம் இரும்... இந்த கண்ணதாசன் பாட்டை கேட்டுட்டு கிளம்புவோம்...'' என, நண்பரை குப்பண்ணா இழுத்து பிடிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

Advertisement