திருக்கழுக்குன்றத்தில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கழுக்குன்றம் மலை மீது வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. மலையை சுற்றி 3 கி.மீ., சுற்றளவு பகுதி மலைவல வீதி என்று அழைக்கப்படுகிறது.

பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலைவல வீதியை கிரிவலம் சுற்றுவதற்கு, சென்னை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், புறநகர் பகுதிகளில் ௨௫,௦௦௦க்கும் மேற்பட்டோர் கூடுவர்.

கன்னியம்மன் கோவிலுக்கு செவ்வாய், வெள்ளி வார விடுமுறை தினங்களில் எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்கின்றனர். கன்னியம்மன் கோவில் அருகே, ஆயர்பாடி, நால்வர்பேட்டை, தேசுமுகிப்பேட்டை போன்ற பகுதிகளில் ஏரளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மலைவல வீதியில் கன்னியம்மன் கோவில் உள்ளது. அதனருகே உள்ள காட்டுப்பகுதிக்குள், 30க்கும் மேற்பட்டோர் கஞ்சா குடித்து வருவதாக கூறப்படுகிறது. ஊராட்சிகளை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தோர் பகல் நேரங்களிலேயே கஞ்சா புகைத்து வருகின்றனர்.

எனவே, காவல் துறை ரோந்து பணியை அதிகரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement