விளாத்திகுளம் மாணவி கொலை விவகாரம் வழக்கு பதியாத போலீசார் மீது நடவடிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: விளாத்திகுளம் மாணவி கொலை விவகாரத்தில், அவர் மாயமானதாக புகார் வந்ததும் வழக்கு பதிவு செய்யாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், குமாரபுரம் வழக்கறிஞர் மாரீஸ்வரி தாக்கல் செய்த பொதுநல மனு:

குளத்துார் அருகே, மார்ச் 10ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு மாணவி வீடு திரும்பினார். அன்று இரவு இயற்கை உபாதைக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. அன்று இரவே பெற்றோர், குளத்துார் போலீசில் புகார் செய்தனர்.

நடவடிக்கை எடுக்காமல் விளாத்திகுளம் மகளிர் போலீசில் புகார் அளிக்கும்படி, அலட்சியமாக தெரிவித்தனர். அங்கும் புகார் அளித்தனர். நடவடிக்கை இல்லை.

மார்ச் 11ல் அந்த கிராமம் அருகே முட்புதரில் ஆடைகள் களையப்பட்டு, வெட்டுக் காயங்களுடன் மர்மமான முறையில் மாணவி இறந்து கிடந்தார்.கஞ்சாவிற்கு அடிமையான சிலர், அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்து, கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது.

போலீசார் விசாரணையை துவங்குவதில் காலம் தாழ்த்தியதால் மாணவியின் உயிர் பறிபோனது. இவ்வழக்கு விசாரணை யை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் என்.சதீஷ்குமார், எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான் வாதம்:

சிறுமி மாயமானதாக மார்ச் 11ல் வழக்கு பதியப்பட்டது. பின், கொலை வழக்காக மாற்றப்பட்டது. விளாத்திகுளம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர், குளத்துார் எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மனுதாரர் தரப்பில் மார்ச் 12ல் அரசுக்கு மனு அனுப்பிவிட்டு, விசாரணையை மாற்றக்கோரி, மறுநாளே இந்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அரசியல் நோக்கங்களுக்காக இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குட்பட்ட ஐந்து பேரின் டி.என்.ஏ., மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, மதுரை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விசாரணையை மாவட்ட எஸ்.பி., கண்காணிக்கிறார். விசாரணை சரியான திசையில் செல்கிறது. தேவையின்றி விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்ற மனு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மாரீஸ்குமார், 'சம்பவம் தொடர்பாக நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். 'நீதிமன்றத்திற்கு செல்லக்கூடாது' என, மாணவியின் பெற்றோரை போலீசார் மிரட்டியுள்ளனர்' என, வாதாடினார்.

நீதிபதிகள், 'சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். கிரிமினல் வழக்கு விசாரணையில் பல்வேறு நடைமுறைகள் உள்ளன. இதை புரிந்து கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

முறையாக விசாரணை நடத்த போலீசாரை அனுமதிக்க வேண்டும். சமூக ஊடகங்களில் விவாதம், அரசியல் அழுத்தம் காரணமாக உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடுவர் .

'நடக்கும் நிகழ்வுகள் எங்களுக்கு தெரியும். மாணவியின் பெற்றோரை, போலீசார் மிரட்டினர் என, மனுதாரர் தரப்பு கூறுகிறது.

'ஆனால், பெற்றோரிடம் போலீசார் பதிவு செய்த வாக்குமூலத்தில் வேறு மாதிரியாக உள்ளது.விசாரணை சரியான திசையில் செல்கிறது' என்றனர்.

தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

விசாரணை அதிகாரியாக விளாத்திகுளம் டி.எஸ்.பி., சுந்தரபாண்டியன் நியமிக்கப்படுகிறார். அவர், மாணவியின் பெற்றோர் வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு பெற்றோர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஏப்., 2ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புகார் வந்ததும் வழக்கு பதிந்து, பின் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததை இந்நீதிமன்றம் தீவிரமாக பார்க்கிறது.

போலீசார் அலட்சியமாக செயல்படக்கூடாது. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வழக்கு பதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.

Advertisement