பஸ்சில் பயணித்த இருவரிடமிருந்து 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளை

கொப்பால்: மந்த்ராலயாவில் இருந்து மங்களூருக்கு சென்ற ஸ்லீப்பர் கோச் பஸ்சில் பயணித்த இருவரிடம் இருந்து, 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தட்சிண கன்னட மாவட்டம் மங்களூரு தாலுகாவை சேர்ந்தவர்கள் முகமது மற்றும் இர்ஷாத். இவர்கள் மந்த்ராலயாவில் இருந்து, 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளுடன் மங்களூருக்கு நேற்று முன்தினம் இரவு ஸ்லீப்பர் கோச் பஸ்சில் புறப்பட்டனர்.

நள்ளிரவு கொப்பால் புறநகரில், தேசிய நெடுஞ்சாலை - 63ல், தவா பஞ்சாப் ஹோட்டல் முன், உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டது. முகமதுவும். இர்ஷாத்தும் நகைகள் இருந்த பையை அருகில் வைத்து கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப்போது, அதே பஸ்சில் இருந்த நபர், நகைகளை கொள்ளையடித்து, பஸ்சில் இருந்து இறங்கி, அங்கு காத்திருந்த கூட்டாளிகளுடன் காரில் தப்பிவிட்டார்.

சிறிது நேரத்துக்கு பின், முகமதுவும், இர்ஷாத்தும் எழுந்து பார்த்த போது, நகைகள் இருந்த பை இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஹோட்டல் முன் இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது, நபர் ஒருவர் நகை பையுடன் காரில் ஏறி தப்பிய காட்சி பதிவாகியிருந்தது. உடனடியாக கொப்பால் ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். விசாரணையை துவக்கியுள்ளனர். கொள்ளையர்கள் மந்த்ராலயாவில் இருந்தே, நகைகளுடன் முகமதுவையும், இர்ஷாதையும் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

கொள்ளையர்களில் ஒருவர் அதே பஸ்சில் பயணித்துள்ளார். ஹோட்டல் அருகில் பஸ் நின்றதும், நகைகளுடன் தப்பியிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement