செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
காரைக்குடி: ரயிலில் தவறவிட்ட 12 சவரன் தங்க நகை, லேப்டாப்பை ஆகியவற்றை காரைக்குடி ரயில்வே போலீசார் உரிய பெண் பயணிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
திருவள்ளுவர் மாவட்டம் நாஜரேத்பேட்டையைச் சேர்ந்தவர் பர்வதவர்த்தினி 34. இவர், செங்கோட்டை மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில், சிவகாசியில் இருந்து திருமங்கலத்திற்கு வந்துள்ளார். ரயிலை விட்டு இறங்கும்போது கையில் வைத்திருந்த லேப்டாப் பேக்கை ரயிலில் தவறவிட்டார். அதில் லேப்டாப் மற்றும் 12 சவரன் தங்க நகை இருந்தது.
இதுகுறித்து பர்வதவர்த்தினி ரயில்வே அவசர உதவி எண்ணுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மதுரை திண்டுக்கல் ரயில் பாதையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் [செங்கோட்டை மயிலாடுதுறை ரயில் தற்போது அருப்புக்கோட்டை மானாமதுரை காரைக்குடி வழியாக திருச்சி செல்கிறது.
காரைக்குடி ரயில்வே போலீசாருக்கு இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், சம்பந்தப்பட்ட ரயிலில் கிடந்த பேக்கை கைப்பற்றினர். பின்னர் பர்வதவர்த்தினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், எஸ்.ஐ.,க்கள் சையது, தீபா தவறவிட்ட ரூ. 14 லட்சம் மதிப்பிலான 12 சவரன் நகை மற்றும் லேப்டாப்பை ஒப்படைத்தனர்.