எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்

1

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் அன்பு மற்றும் நன்மதிப்பை பெற்ற ரஜினிகாந்த் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜூனா பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை;

தமிழ்த் திரையுலகின் சூப்பர்ஸ்டார், அன்புச் சகோதரர் ரஜினிகாந்த் குறித்து தவெக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் நிர்வாகி ஒருவர் அவதூறான கருத்துகளை பேசியுள்ளது கண்டனத்திற்குரியது. அரசியலை கடந்து எல்லோராலும் மதிக்கப்படும் திரை ஆளுமை ரஜினிகாந்த்.

எம்ஜிஆர் அன்பையும், ஜெயலலிதா நன்மதிப்பையும் பெற்ற அவரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியிருப்பது ஏற்கதக்கதல்ல. அரசியலுக்கு வருவது எப்படி ஒவ்வொரு தனி மனிதரின் உரிமையோ, அதே போல் அரசியலுக்கு வராமல் இருப்பதும் அவர் தம் உரிமை.

அதற்கான உரிய காரணத்தை அவரே தெரிவித்துவிட்ட பிறகு, அதற்கு மதிப்பளிக்க வேண்டுமே தவிர, அரசியல் நோக்கத்தோடு அதை அணுகி, அவதூறு கருத்துகளை பேசுவது என்பது அரசியல் நாகரிகமற்ற செயல்.

இவ்வாறு இபிஎஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement