தரக்குறைவாக பேசிய கவுன்சிலர் துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு

தஞ்சாவூர் :
சுகாதார ஆய்வாளரை, தரக்குறைவாக பேசிய அ.தி.மு.க., கவுன்சிலர் மீது, உரிய நடவடிக்கை எடுக்க கோரி, துாய்மை பணியாளர்கள் போர்க்கொடி பிடித்துள்ளனர்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி, 17வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் காரல் மார்க்ஸ். இவர், நேற்று நடந்த பேரூராட்சி கூட்டத்தில் பங்கேற்று, 'நம் பகுதிக்கு சாலை வசதி வேண்டும்' என, ஆவேசமாக பேசி, மொபைல் போனை டேபிளில் அடித்து, சத்தமிட்டுள்ளார்.
அப்போது, சுகாதார ஆய்வாளர் செந்தில் குமரகுரு, 'தங்கள் கோரிக்கையை அமைதியாக கூறுங்கள். ஏன் சத்தம் போடுகிறீர்கள்?' எனக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த கவுன்சிலர் காரல் மார்க்ஸ், 'நீ யாருடா என்னை உட்கார சொல்ல?; வெளியே வா, உன்னை என்ன செய்கிறேன் பார்' என, ஒருமையில் விமர்சித்துள்ளார்.


இதையடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சுகாதார ஆய்வாளர் செந்தில் குமரகுரு, பேராவூரணி போலீசில் புகாரளித்தார்.
இந்நிலையில், பேரூராட்சி அலுவலகம் முன் திரண்ட, 50க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தரக்குறைவாக பேசிய கவுன்சிலர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷமிட்டனர். மேலும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்தனர்.

Advertisement