சர்வதேச விமான நிலையமா... மர்ம நபர்கள் தங்கும் விடுதியா?

சென்னை: சென்னை விமான நிலையத்தில், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பயணியருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உறங்குவதாக, புகார் எழுந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில், தினமும் 55,000த்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். பொதுவாக விமான நிலையங்களில் பயணியர் மற்றும் ஊழியர்கள் உள்ளே வந்து செல்லவே, அனுமதி உள்ளது.

பயணியருடன் வரும் பார்வையாளர்கள், குறிப்பிட்ட நேரம் இருந்துவிட்டு செல்ல கட்டுப்பாடு உள்ளது. இதை மீறி சந்தேகிக்கும் வகையில் ஆட்கள் நடமாட்டம் இருந்தால், பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாநில போலீசார் விசாரிப்பர்.

சமீப நாட்களாக, சென்னை விமான நிலையத்தில், இரவில் மர்ம நபர்கள் வந்து, முனையங்களின் எதிரே துாங்கிவிட்டு மீண்டும் காலையில் எழுந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

குறிப்பாக திரிசூலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், வீடற்று இருக்கும் சிலர், விமான நிலையம் முனையம் எதிரே உள்ள வளாகத்தில், இஷ்டத்துக்கு படுத்து உறங்குவது பயணியருக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

விமான நிலையம் முழுதும் கண்காணிப்பு கேமரா இருந்தும், வெளியில் இருந்து வந்து எந்த பயமு மின்றி மர்ம நபர்கள் நடமாடுவது, பயணி யரின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இது குறித்து பயணி ஒருவர் கூறியதாவது:

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரவில் வந்ததும், சர்வதேச வருகை முனையம் எதிரே உள்ள 'டீ கடை' ஒன்றில் காத்திருந்தேன்.

அப்போது தண்ணீர் பாட்டில், பழைய மூட்டைகளுடன் ஒருவர், அப்பகுதியில் சுற்றித்திரிந்தார். சிறிது நேரம் கழித்து தரையில் படுத்து உறங்க துவங்கிவிட்டார்.

உயர் பாதுகாப்பு உள்ள சர்வதேச விமான நிலையத்தில், எளிதாக எப்படி அவர் நுழைந்தார் என்ற சந்தேகம் எழுகிறது.

இதனால், பயணியர் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விமான நிலைய போலீசார் இரவு நேரத்தில், முனையத்திற்கு வெளியே கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை விமான நிலைய போலீசார் கூறுகையில், 'விமான நிலைய முனையங்களின் வெளியே எப்போதும் போலீசார் பணியில் இருக்கின்றனர். இது குறித்து உடனடியாக விசாரித்து வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

Advertisement