தரமற்று அவசரகதியில் சாலை சீரமைப்பு; பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்

அரூர்: அரூரில், தரமற்ற முறையில் தார்ச்சாலை சீரமைப்பு பணிகள் நடப்பதாக கூறி, பணிகளை கிராமமக்கள் தடுத்து நிறுத்தினர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்கு உட்பட்ட, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல், எச்.தொட்டம்பட்டி வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, 1.30 கோடி ரூபாய் மதிப்பில், தார்ச்சாலை சீரமைக்கும் பணிக்கு, கடந்த பிப்., 11ல் பூமி பூஜை நடந்தது. தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி பணிகளை துவக்கி வைத்தார். கடந்த சில நாட்களாக பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாலை, 4:30 மணிக்கு தொட்டப்பட்டி பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில், 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, சாலை பெயர்க்கப்படாமல் அதன் மேல் தார் கலவை கொட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடந்தது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தார்ச்சாலையை முறையாக சீரமைக்கக்கோரி, பணிகளை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, தார்ஜல்லி கொண்டு வரப்பட்ட, 3 டிப்பர் லாரிகள் மற்றும் தார் ஊற்றும் வாகனம் ஆகியவற்றை அங்கிருந்து சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் அவசர, அவசரமாக அரூருக்கு ஓட்டிச் சென்றனர்.

இது குறித்து எச்.தொட்டம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: தொட்டம்பட்டி சாலை வழியாக தினமும், அரசு பஸ் மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் என, ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல், எச்.தொட்டம்பட்டி வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து, பச்சினாம்பட்டி வரை, முக்கால் கி.மீ., துாரத்திற்கு சாலை பெயர்க்கப்பட்டு, இரண்டு லேயர் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது. ஆனால், பச்சினாம்பட்டி முதல் தொட்டம்பட்டி வரை சாலை பெயர்க்கப்படவில்லை. மேலும், சாலையை குறுகலாக்கி அதன் மேலேயே தார் கலவை கொட்டப்பட்டு தார் ஊற்றப்படுகிறது. இதனால், ஜல்லிக் கற்கள் அப்படியே பெயர்ந்து விட்டது.

சில இடங்களில் குழிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதைக்கூட அப்புறப்படுத்தாமல், சமப்படுத்தாமல் அப்படியே அதன் மீது தார் ஊற்றுகின்றனர். முறையாக சாலை அமைக்க கூறியவுடன், தொழிலாளர்கள் மற்றும் தார் ஊற்றும் வாகனம், தார் கலவையை ஏற்றி வந்த, 3 டிப்பர் லாரிகளை அதன் டிரைவர்கள் திரும்ப எடுத்துச் சென்று விட்டனர். சாலைப் பணிகளை கண்காணிக்க வேண்டிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் என யாரும் வருவதில்லை. முறையாக சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஏற்கனவே, அரூர் நகராட்சியில் சிமென்ட் சாலை, தார்ச்சாலை சீரமைக்கும் பணிகள் தரமற்று உள்ளதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் புகார் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement