ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக வேட்பாளரை நிறுத்த விவசாயிகள் ஆலோசனை

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பலவனப்பள்ளி, முத்தாலி, அடவனப்பள்ளி, தாசப்பள்ளி, பெத்த முத்தாலி, அட்டூர், அலேநத்தம், காருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, வெங்கடேசபுரம், மிடுதேப்பள்ளி ஆகிய, 12 கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில், பன்னாட்டு விமான நிலையத்திற்காக, 2,980 ஏக்கர் நிலத்தை, தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்துள்ளது.

அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'அறிவுசார் வழித்தடம்' திட்டத்திற்காக, ஓசூர் பகுதியை சுற்றி அமைக்கப்படும் பல்வேறு சாலைகளின் இருபுறமும், 500 முதல், 1000 மீட்டர் துாரத்திற்கு, புறம்போக்கு மற்றும் விவசாய நிலங்கள் என மொத்தம், 36,000 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த நினைப்பதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி போராடி வருகின்றனர்.

கடந்த, 9ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க சென்ற விவசாயிகள், 67 பேர், அண்ணா அறிவாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கடந்த, 13ம் தேதி கிருஷ்ணகிரி வந்த துணை முதல்வர் உதயநிதி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு நிச்சயம் செயல்படுத்தாது என்றும், அறிவுசார் வழித்தடம் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அதற்கான எந்த பணிகளும் துவங்கவில்லை. சாலைகளில் இருபுறமும், ஒரு கி.மீ., துாரத்திற்கு நிலம் எடுக்கப்படும் என்பது, பொய்யான தகவல் என விளக்கமளித்தார்.
ஆனால், விமான நிலையம் மற்றும் அறிவுசார் வழித்தடம் முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட திட்டம். அதனால், தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,

விவசாய நிலங்களை கையகப்படுத்தி, இத்திட்டங்களை செயல்படுத்துவர் என, விவசாயிகள் நினைக்கின்றனர். தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கட்சிகளிடம் மனுக்களை வழங்கி உள்ளனர். இந்நிலையில் வரும் தேர்தலில், அனைத்து வேட்பாளர்களையும் எதிர்த்து, ஓசூர் சட்டசபை தொகுதியில் களம் இறங்கலாமா என, விவசாயிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாயிகள் கூறும்போது: தேர்தலில் போட்டியிடலாமா என ஆலோசிக்கிறோம். இதனால் வெற்றி பெற முடியாது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், எங்கள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் எவ்வளவு ஓட்டு பெறுகிறார் என்பதை வைத்து, திட்டத்திற்கு எதிரான மனநிலையில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பதை, அரசு நேரடியாக அறிந்து கொள்ளும். அதனால் தேர்தலில் போட்டியிடலாம் என, பல விவசாயிகள் கூறுகின்றனர். ஆனால், இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. ஆலோசனை நடத்தி வருகிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement