படுகொலையை ராணுவ நடவடிக்கையாக மாற்ற முயற்சி: பாக்.,கிற்கு இந்தியா கடும் கண்டனம்

7


புதுடில்லி: ஆப்கன் மருத்துவமனையில் 400 பேர் உயிரிழக்க காரணமான பாகிஸ்தான் தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்கு பெரிய படுகொலையை நிகழ்த்திவிட்டு ராணுவ நடவடிக்கை போல் மாற்ற அந்நாடு முயற்சி செய்கிறது என தெரிவித்துள்ளது.



இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மிருகத்தனமான படுகொலை, கோழைத்தனமான மற்றும் மனசாட்சியற்ற வன்முறை செயல். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தை எந்த வகையிலும் ராணுவ இலக்காக நியாயப்படுத்த முடியாது. படுகொலையை ராணுவ நடவடிக்கை போல் சித்தரிக்க பாகிஸ்தான் முயற்சிக்கிறது.


பாகிஸ்தான் நடத்தியது கொடுமையான ஆக்கிரமிப்பு செயல். இது ஆப்கனின் இறையாண்மை மீதான அப்பட்டமான தாக்குதல். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தானின் பொறுப்பற்ற நடத்தையை காட்டுவதுடன்,எல்லைக்கு அப்பால் வன்முறையை தூண்டிவிட்டு, உள்நாட்டு தோல்விகளை மறைக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறது.


மருத்துவமனையையும், அதன் நோயாளிகளையும் வேண்டுமேன்றே குறிவைப்பதை எந்த நம்பிக்கையோ, சட்டமோ அல்லது அறநெறியோ நியாயப்படுத்த முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

400 பேர் பலி



பாகிஸ்தானுக்கும் அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்கும் சமீப நாட்களாக டிடிபி பயங்கரவாத அமைப்பு விவகாரத்தில்மோதல் நிலவி வருகிறது. ஆப்கன் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. இந்நிலையில், நேற்று ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 250 பேர் காயம் அடைந்தனர். இதனை முதலில் மறுத்த பாகிஸ்தான் பிறகு ஒப்புக் கொண்டது. மேலும், தனது செயலை நியாயப்படுத்த, தாக்குதலுக்கு பிறகு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாகவும், அங்கு வெடிபொருள் கிடங்கு இருந்ததை காட்டுகிறது எனவும் தெரிவித்து இருந்தது.

Advertisement