ராஜ்யசபாவில் யார் கை ஓங்கியுள்ளது? தேஜ கூட்டணி ஆதிக்கம், எதிர்க்கட்சிகள் பின்னடைவு

3

நமது சிறப்பு நிருபர்

ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 37 இடங்களில் 22 இடங்களில் வெற்றி பெற்று, தனது ஆதிக்கத்தை பலப்படுத்தி உள்ளது.


ராஜ்யசபாவில் மொத்த எம்பிக்களின் எண்ணிக்கை 250. இதில் 238 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும், 12 பேர் ஜனாதிபதியாலும் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் ஆறு ஆண்டுகள் பதவி வகிக்கின்றனர், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.


தற்போது, காலியாக இருந்த 37 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், 26 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 11 இடங்களுக்கு, அதாவது பீஹாரில் 5, ஒடிசாவில் 4, மற்றும் ஹரியானாவில் 2 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.


பீஹாரில் உள்ள 5 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. ஒடிசாவில், பாஜ 2 இடங்களையும், பிஜு ஜனதா தளம் 1 இடத்தையும், பாஜ ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 1 இடத்தையும் வென்றனர். ஹரியானாவில் பாஜவும், காங்கிரசும் தலா ஒரு இடத்தை வென்றன.

போட்டியின்றி நடந்த 26 எம்பி பதவிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 13 இடங்களைக் கைப்பற்றியது. இதில் பாஜ மட்டும் 7 இடங்களை வென்றது. மீதமுள்ள இடங்களை சிவசேனா, இந்திய குடியரசுக் கட்சி (அதாவலே), தேசியவாத காங்கிரஸ் கட்சி, அதிமுக, பாமக மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் பெற்றன.


போட்டியிட்ட மற்றும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களையும் சேர்த்து, 37 இடங்களில் 24 இடங்களை தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகள் கூட்டாக 13 இடங்களைப் பெற்றுள்ளன. இது ராஜ்யசபாவில் தேஜ கூட்டணி எம்பிக்களின் ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரம் என்ன?

கட்சி வாரியாக ராஜ்யசபாவின் தற்போதைய நிலை இதோ:

தேஜ கூட்டணி (மொத்தம்: 141 )

* பாஜ: 106 (5 நியமன எம்பிக்கள் உட்பட)

* அதிமுக- 5

* ஜேடியு- 4

* தேசியவாத காங்கிரஸ் கட்சி- 4

* தெலுங்கு தேசம் கட்சி- 2

* சிவசேனா- 2

* ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்- 2

* ஏஜிபி-1

* ஜேடிஎஸ்- 1

* ராஷ்ட்ரிய லோக் தல் - 1

* ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா- 1

* தேசிய மக்கள் கட்சி- 1

* பாமக- 1

* இந்திய குடியரசுக் கட்சி-அத்வாலே- 1

* எம்என்எப்- 1

* சுயேச்சைகள்: 2 (திலிப் ரே மற்றும் கார்த்திகேய சர்மா)

இண்டி கூட்டணி (மொத்தம்: 75)

* காங்கிரஸ் - 29

* திரிணமுல் காங்கிரஸ் -13

* திமுக- 8

* சமாஜ்வாதி கட்சி- 4

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட்- 3

* ராஷ்ட்ரிய ஜனதா தளம்- 3

* தேசிய மாநாடு கட்சி- 3

* ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா- 2

* இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்): 2

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ): 2

* தேசியவாத காங்கிரஸ் கட்சி-சரத்சந்திர பவார் (என்சிபி-எஸ்பி): 1

* சிவசேனா-உத்தவ் பாலாசாகேப் தாக்கரே - 1

* கேசிஎம்- 1

* தேமுதிக- 1

* மக்கள் நீதி மய்யம்- 1

* சுயேச்சை: 1 (கபில் சிபல்)

மற்றவர்கள் (மொத்தம்: 27)

* ஆம் ஆத்மி கட்சி)- 10

* YSRCP- 7

* பிஜு ஜனதா தளம் - 6

* பிஆர்எஸ்- 3

* பகுஜன் சமாஜ் கட்சி- 1

காலியாக இருப்பது?

2 (1 ஜார்கண்ட் மற்றும் 1 நியமனம்)

தற்போது எம்பிக்கள் 245 பேர் உள்ளனர். தமிழகத்திலிருந்து ராஜ்யசபா எம்பிக்கள் 18 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement