சுப்ரீம் கோர்ட்டில் 3,500 பொதுநல வழக்குகள் நிலுவை; மத்திய அரசு தகவல்

நமது சிறப்பு நிருபர்




''சுப்ரீம் கோர்ட்டில் 3,500 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 42 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத மிகப் பழைய ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது '' என பார்லிமென்டில் மத்திய சட்ட துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

இது குறித்து பார்லிமென்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு லோக்சபாவில் சட்ட துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் கூறியிருப்பதாவது: மார்ச் 10ம் தேதி நிலவரப்படி, சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 3,525 பொதுநல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 698 வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இவற்றில் 42 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத மிகப் பழைய ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் 42 ஆண்டுகளாக எவ்விதத் தீர்ப்பும் இல்லை.



தீர்ப்புக்காகக் காத்திருக்கும் மிகப்பழமையான பொதுநல வழக்கு, 1984ம் ஆண்டிலேயே தாக்கல் செய்யப்பட்டதாகும். மேலும் இரண்டு வழக்குகள் 1985ம் ஆண்டிலிருந்து நிலுவையில் உள்ளன. 1995 மற்றும் 1996ம் ஆண்டுகளிலிருந்து நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டு பொதுநல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. நிலுவையில் உள்ள பொது நல வழக்குகளில் பலவற்றைத் தாக்கல் செய்த மனுதாரர்கள், ஏற்கனவே காலமான நிலையில், அவர்கள் தொடர்ந்த வழக்குகள் மட்டும் இன்னும் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.


ஒரு பொதுநல வழக்கை முழுமையாக முடித்துவைக்க சராசரியாக எவ்வளவு காலம் ஆகிறது என்பது குறித்த விவரங்கள் தற்போது தெரியவில்லை. 2014ம் ஆண்டிலிருந்து தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள பொதுநல வழக்குகளின் எண்ணிக்கை உடன் ஒப்பிடும் போது, 2025ம் ஆண்டில் அதிகபட்சமாக 570 பொதுநல வழக்குகள் தாககல் செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. இது ஏற்கனவே 80,000க்கும் மேற்பட்ட வழக்குகளால் நிரம்பி வழியும் சுப்ரீம்கோர்ட்டின் பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளது.


அடுத்த படியாக, 2019ம் ஆண்டில் 347 வழக்குகளும், 2020ம் ஆண்டில் 306 வழக்குகளும், 2026ம் ஆண்டில் 293 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள பொதுநல வழக்குகளில் பெரும்பாலானவை சுற்றுச்சூழல், நிலச் சட்டங்கள் மற்றும் விவசாயக் குத்தகை தொடர்பான விவகாரங்களையே சார்ந்தவையாக உள்ளன.


கடந்த ஐந்து ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத்தால் 1,872 பொதுநல வழக்குகளை மட்டுமே முடித்துவைக்க முடிந்துள்ளது; நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு, நீதிபதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இவ்வாறு அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்தார்.

Advertisement