சூறாவளி காற்றுடன் மழை: வாழை, தென்னை மரங்கள் முறிந்தன

சூலூர்:

அரசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், தோட்டங்களில் வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்தன.

சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை, பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. அரசூர் சுற்றுப்பகுதியில் சூறாவளி காற்றுடன், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது.

40 மி.மீ., மழையளவு. பதிவாகி இருந்தது.

பலத்த காற்றால், அரசூர் பகுதியை சேர்ந்த சம்பத், ராமசாமி, செல்வராஜ் உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களில், ஆயிரக்கணக்கான வாழை மரங்களும், எட்டுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் முறிந்து விழுந்தன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,' அறுவடை தயாரான நிலையில் வாழை மரங்கள் முறிந்ததால் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலத்த காற்று வீசியதால், தென்னை மரங்களும் தப்பவில்லை. குலையுடன் மரத்தின் மேல்பகுதி முறிந்து விழுந்துள்ளன. வேளாண் துறையினர் கள ஆய்வு செய்து எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

மரக்கிளை முறிந்தது :

சூலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இரு பெரிய மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை வீசிய பலத்த காற்றால், மரத்தின் பெரிய கிளை முறிந்து விழுந்ததில், பொதுமக்கள் அமரும் கிரானைட் கல்லால் ஆன 'பெஞ்ச்' உடைந்தது. பத்திரபதிவுக்கு வந்திருந்த மக்கள், மழை பெய்ததால், அலுவலகத்துக்குள் சென்றனர். இதனால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Advertisement