புதிய ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் பெற்றும் உணவு பொருட்கள் வாங்க முடியாத அவலம்

காஞ்சிபுரம்: புதிய ரேஷன் அட்டை பெற பயனாளிகளுக்கு ஒப்புதல் பெற்ற பிறகும், புதிய அட்டை வழங்காததால், பயனாளிகள் பலரும் ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

காத்திருப்பு இதற்கான, அறிவிப்புகள் கடந்த 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில நாட்கள் முன்பாக, புதியதாக ரேஷன் அட்டை கேட்டு விண்ணப்பித்த பலருக்கும் ரேஷன் அட்டை பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதற்கான குறுஞ்செய்தி, பயனாளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாட்களில் புதிதாக ரேஷன் அட்டை வழங்கப்படும் என, மாவட்டம் முழுதும் பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், புதிதாக ரேஷன் அட்டை வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 15ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த காரணத்தால், புதிய ரேஷன் அட்டை வழங்க முடியாது என, பொது வினியோக திட்ட அதிகாரிகள் பயனாளிகளுக்கு பதில் அளிக்கின்றனர்.

புதிய அட்டை ரேஷன் அட்டைக்கு ஒப்புதல் பெறப்பட்டும்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஏராளமானோருக்கு ரேஷன் அட்டை பெற முடியாமலும், ரேஷன் கடைகளில் உணவு பொருட்களை வாங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, பொது வினியோக திட்ட அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக புதிதாக ரேஷன் அட்டை அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது.

'மாவட்டம் முழுதும், 150 பேர் வரையிலான பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டை வழங்க முயன்றோம்; ஆனால், ஆன்லைனில் லாக் செய்யப்பட்டது. தேர்தலுக்கு பின் தான் புதிய அட்டை வழங்கப்படும்' என்றார்.

Advertisement