பக்தர்கள் அவதி ராமேஸ்வரத்தில் பயன்பாட்டிற்கு வராத ஓய்வு கூடம் முதல்வர் ஸ்டாலின் திறந்து 19 நாட்களாகியும் அவலம்
ராமேஸ்வரம், மார்ச் 18- - முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்து 19 நாட்களாகியும் ராமேஸ்வரம் கோயில் பக்தர்கள் ஓய்வு கூடம் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். கோயில் நான்கு ரதவீதியில் இலவச ஓய்வறை கூடம், குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் அலைபேசி, காலணிகள் பாதுகாப்பு அறைகள் உள்ளிட்ட பக்தர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கோயில் பகுதியில் இல்லை.
இதனால் தனியார் தங்கும் விடுதிகள், தனியார் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்படுவதால் கூடுதல் செலவுகள் ஏற்படுகிறது. ஆனால் ஏழை பக்தர்கள் இரவில் கோயில் ரதவீதி ஓரத்திலும், அக்னி தீர்த்த கரையிலும் ஓய்வெடுத்து திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிப்பதால் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுவதுடன் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1கோடியில் கோயில் சன்னதி தெருவில் அலைபேசி மற்றும் லாக்கர் அறை வசதியுடன் ஓய்வறை கூடம் மற்றும் நான்கு ரதவீதியில் செல்ல புதிய பஸ் வசதி, கோயில் பிரசாதம் தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டு பிப்.,26ல் முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
அவசரகதியில் திறந்து முடக்கம் ஆனால் முதல்வர் திறந்து வைத்து இன்றுடன் 19 நாட்கள் ஆகியும் அலைபேசி பாதுகாப்பு அறை, லாக்கர் வசதி உள்ளிட்ட பக்தர்களின் ஓய்வறை கூடத்தை இன்று வரை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் முடங்கியுள்ளது. இங்கு அலைபேசி வைக்க கணினி வசதி மற்றும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தாத நிலையில், மக்களிடம் பெயர் வாங்க அவசரகதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து இன்று வரை பக்தர்கள் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கி கிடக்கிறது.
இதனால் பக்தர்கள் காலணிகள் , அலைபேசிகளை வைக்க முடியாமலும், ஓய்வறை கூடம் இன்றி ரதவீதி சாலை ஓரத்தில் அமர்ந்து சுகாதாரக் கேடாக சாப்பிடும் அவல நிலை உள்ளது. மேலும் பக்தர்கள் விட்டுச் செல்லும் காலணிகள் கோயில் கிழக்கு, வடக்கு, தெற்கு நுழைவு வாசல் முன்பு சிதறி கிடக்கிறது. இதனை பக்தர்கள் தேடி எடுக்க முடியாமல் விட்டு செல்வதால் இறுதியாக நகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ளும் லாரியில் எடுத்துச் செல்கின்றனர்.
ஐந்து ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஒரு சதவீதம் அடிப்படை வசதியை கூட நிறைவேற்றாமல், காணிக்கை வசூலிப்பதிலே குறிக்கோளாக இருந்த தமிழக அரசு, பெயரளவுக்கு திறந்து வைத்து அதுவும் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும்
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை; 3 நாட்களில் சவரனுக்கு ரூ.1,520 குறைவு
-
கோவில் உண்டியலில் கொள்ளை
-
லாரி - வேன் நேருக்கு நேர் மோதல் கோவில் அர்ச்சகர் உள்பட 2 பேர் பலி
-
குளித்தலை சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் 'சஸ்பெண்ட்'
-
தொழிலதிபர் மீது வழக்கு ஜோலார்பேட்டை, மார்ச் 18
-
வேட்டைக்கு பன்றி வெடி வைத்திருந்த 3 பேர் கைது