பரமக்குடியில் 36 வார்டுகளில் 618 நாய்கள் கணக்கெடுப்பு கு.க., பணி தீவிரம்

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் 618 நாய்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ள நிலையில் கு.க., செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நகராட்சியில் பிப்., துவங்கி தெரு நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக கால்நடை மருத்துவமனையில் கூண்டுகள் தயார் செய்யப்பட்டு வாரம் 15 நாய்கள் என்ற கணக்கில் பெண் நாய்களுக்கு கருமுட்டை, ஆணிற்கு வெதர் நீக்கம் செய்யப்படுகிறது. இதன்படி பெண் 5 நாட்களும், ஆண் நாய்கள் 3 நாட்களும் கண்காணிக்கப்பட்டு பின்னர் அதே பகுதியில் விடப்படுகின்றன.

முன்பு என்.ஜி.ஓ.,க்கள் மூலம் கு.க., செய்ய நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது விலங்கு பாதுகாப்பு, நகராட்சி, கால்நடை மருத்துவத் துறை இணைந்து பணிகளை மேற்கொள்கிறது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் நடக்கும் நிலையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பரமக்குடி கால்நடை டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் கு.க., பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகராட்சி இடத்தில் நாய்கள் பாதுகாப்பு மையம் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட உள்ளது.

இங்கு நோய் பரவிய நாய்களை பிடித்து உரிய சிகிச்சை அளித்து உணவு அளிக்கப்படும். மேலும் ஆண்டு முழுவதும் நாய்களுக்கு கு.க., செய்ய அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. பள்ளி, நீதிமன்றம், மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட சில வரையறுக்கப்பட்ட பொது இடங்களில் பிடிக்கப்படும் நாய்களும் மீண்டும் அதே பகுதியில் விடாமல் பாதுகாப்பு மையத்தில் வளர்க்கப்படும் நிலை உள்ளது. தற்போது வரை 34 நாய்களுக்கு கு.க., செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி சுகாதார அலுவலர் (பொ) மதன் தெரிவித்தார்.

Advertisement