கார் மோதி குதிரை பலி

போத்தனூர்: போத்தனூர் -- செட்டிபாளையம் ரோட்டில், நேற்று காலை, கார் ஒன்று செட்டிபாளையம் நோக்கி சென்றது. அப்போது அங்கு சுற்றிய குதிரை மீது மோதியது. படுகாயமடைந்த குதிரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இப்பகுதியில், குதிரைகள் அதிகளவு சுற்றுகின்றன. இதனால், வாகனங்களில் செல்வோர் கடும் அவதிப்படுகின்றனர்.

அதேபோல், செட்டிபாளையம் ரோடு சந்திப்பு - பொள்ளாச்சி ரோடு சந்திப்புக்கு செல்லும் வழியில் தினமும் காலை வேளையில், மாடுகள் அதிகம் செல்கின்றன.

குறிப்பாக, பள்ளிகள் துவங்கும் நேரத்தில் இப்பிரச்னை அதிகம். பெற்றோர் பள்ளிக்கு குழந்தைகளை சரியான நேரத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

கால்நடைகளை ரோட்டில் விடுவோர் மீது, மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement