பைக் மெக்கானிக்கை தாக்கிய எஸ்.ஐ., நள்ளிரவில் காவல் நிலையம் முற்றுகை

பொன்னேரி: பைக் மெக்கானிக்கை, போலீஸ் எஸ்.ஐ., தாக்கியதை கண்டித்து, உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை வைத்திருப்பவர் சாதிக் பாட்ஷா, 34.

இவர் நேற்று முன்தினம் இரவு, கடையில் இருந்த பைக்கை எடுக்கும்போது, அவ்வழியாக சென்ற எஸ்.ஐ., ஒருவர் மீது லேசாக இடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எஸ்.ஐ., மற்றும் அவருடன் வந்தவர்கள் சாதிக் பாட்ஷாவை தாக்கியதுடன், அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றனர். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சாதிக் பாட்ஷாவை தேடினர்.

சிறிது நேரத்திற்கு பின், சாதிக் பாட்ஷா, பொன்னேரி ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே இருப்பது தெரிந்தது.

உறவினர்கள் அங்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி போலீசாரும் அங்கு சென்று, சாதிக் பாட்ஷாவை மீட்டு, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சாதிக் பாட்ஷாவை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

உரிய நடவடிக்கை எடுப்பதாக பொன்னேரி போலீசார் உறுதியளித்ததால் கலைந்து சென்றனர். சாதிக் பாட்ஷாவும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

போலீசாரின் விசாரணையில், சாதிக் பாட்ஷாவை தாக்கிய எஸ்.ஐ., சென்னை கொளத்துார் தனிப்படை போலீசார் என்பதும், வழக்கு விசாரணை ஒன்றிற்காக பொன்னேரி வந்தபோது, மேற்கண்ட சம்பவம் நடந்ததும் தெரிந்தது.

இது குறித்து பொன்னேரி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement