தமிழக கேரள எல்லையில் வாகன சோதனை- தீவிரம் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு

l

கூடலுார் தமிழக கேரள எல்லையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாகன சோதனை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய பகுதியாக குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு உள்ளன. சட்டசபை தேர்தல் தமிழகத்தில் ஏப்.23, கேரளாவில் ஏப்.9ல் நடைபெறுகிறது. கேரளாவில் மனு தாக்கல் நடந்து வந்த போதிலும் எல்லைப் பகுதிகளில் தேர்தல் பிரசாரங்கள் களை கட்டவில்லை. இருந்த போதிலும் கண்காணிப்பு பணிக்காக எல்லைப் பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏல தோட்டங்களுக்கு கூடலுார், கம்பம் பகுதியில் இருந்து தொழிலாளர்கள் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கேரளாவிற்கு சென்று திரும்பி வருகின்றனர். பணம், பரிசுப் பொருட்கள் அதிக அளவில் கடந்து செல்லும் என்பதால் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு பின்பு அனுமதிக்கப்படுகின்றன.

ஏல விவசாயத்தில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளைச் சந்தித்து ஓட்டு கேட்பதற்காக இடுக்கி மாவட்டத்தில் உள்ள காங்., கம்யூ., கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கூடலுார், கம்பம் பகுதிகளுக்கு வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் ஓட்டுரிமை உள்ளவர்கள் ஏராளமானோர் இடுக்கி மாவட்டத்தில் தங்கியுள்ளனர். இவர்களை சந்திக்கவும் தமிழக அரசியல்வாதிகள் செல்ல உள்ளனர். அதனால் பணப்பட்டுவாடா முன்கூட்டியே நடக்கும் என்பதால் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தர விடப்பட்டுள்ளது.

குமுளி கேரளாவில் அதிகளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகப் பகுதியிலும் 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் போலீசாருக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement