ஐ.ஐ.டி., விளையாட்டு போட்டி லயோலா கல்லுாரி 'சாம்பியன்'

சென்னை: சென்னையில் நடந்த மாநில வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டியில், லயோலா கல்லுாரி அணி 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை ஐ.ஐ.டி., சார்பில், இருபாலருக்குமான ஜிம்மி ஜார்ஜ் மாநில விளையாட்டு போட்டிகள், கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்தது.

இதில், வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகளில், மாநிலத்தின் 20-க்கும் அதிகமான அணிகள் பங்கேற்றன.

நேற்று முன்தினம், இதன் இறுதி லீக் போட்டிகள் நடந்தன. முதலில் நடந்த வாலிபால் போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி அணி, அதிக புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தது.

பனிமலர் கல்லுாரி மற்றும் செயின்ட் ஜோசப் கல்லுாரி அணிகள் முறையே, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்தன.

இதன் மகளிர் பிரிவு போட்டியில், பனிமலர் கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தையும், ராணி மேரி கல்லுாரி மற்றும் கிறித்துவ கல்லுாரி அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களையும் பிடித்தன.

கூடைப்பந்து ஜி.எப்.கே.ஆர்., கூடைப்பந்து போட்டியின் இறுதி சுற்றுகள், நேற்று முன்தினம் இரவு நடந்தன. இதன் ஆடவர் பிரிவில், சென்னை எம்.சி.சி., கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தையும், லயோலா கல்லுாரி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

தொடர்ந்து நடந்த மகளிர் போட்டியில், சென்னை லயோலா கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தையும், செயின்ட் ஜோசப் கல்லுாரி அணி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.

Advertisement