அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை மேல்சபையில் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் விளக்கம்

பெலகாவி: ''அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை இல்லை. மருந்துகள் வாங்க டெண்டர் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. நேரடியாக, 80 சதவீத மருந்துகள் வாங்கப்படுகின்றன,'' என, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

சட்ட மேல்சபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, பா.ஜ., உறுப்பினர்கள் தனஞ்செயா சர்ஜி மற்றும் பிரதாப் சிம்ஹ நாயக் ஆகியோர், 'அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. மாநிலத்தின் மருந்து சேமிப்பு கிடங்குகளில் மருந்துகள் இல்லை.

'அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வினியோகிக்கப்படவில்லை. நோயாளிகள் கட்டாயத்தின் பேரில், வெளியில் உள்ள கடைகளில் மருந்து வாங்குகின்றனர். இருமல், சளி, நோய் நிவாரண மாத்திரைகள் ஸ்டாக் இல்லை. இதுகுறித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.

அவர்களுக்கு பதில் அளித்த, அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:

அரசு மருத்துவமனைகளில், மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகள் வாங்க டெண்டர் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு உள்ளன.

கர்நாடக வினியோக மருந்துகள் கார்ப்பரேஷன் லிமிடெட், 80 சதவீத மருந்துகளை நேரடியாக வாங்குகிறது. 20 சதவீதம் மருந்துகளை, மருத்துவமனைகளே வாங்கி கொள்ளும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணம் வழங்கப்படுகிறது.

மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள, இரண்டு, மூன்று மாதங்களுகு ஒரு முறை, மருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்துகளை வினியோகிப்பதற்கு முன், அவற்றின் தரத்தை பரிசோதித்த பின்னரே, மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. தற்போது, 270 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் வாங்கப்பட்டன. கிடங்குகளில் சேமிப்பில் உள்ள மருந்துகளின் அளவு, மருந்துகளின் வினியோகத்தை கண்காணிக்க, 'ரியல் டைம் டிராக்கிங் சிஸ்டம்' செயல்படுத்தப்பட்டது.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மாநிலத்தின் மக்கள் தொகைக்கு தகுந்தார் போல, 820 ஆம்புலன்ஸ்கள் இருக்க வேண்டும். ஆனால், கர்நாடகாவில் 1,715 ஆம்புலன்ஸ்கள் இயங்குகின்றன. பற்றாக்குறை இல்லை. சமீபத்தில், 262 ஆம்புலன்ஸ்கள் புதிதாக வாங்கப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement