காஸ் சிலிண்டர் இருப்பு விபரம் தாக்கல்: மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் எல்.பி.ஜி., காஸ் சிலிண்டரின் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிவிக்க, மத்திய, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேற்காசிய போரால், உலகம் முழுதும் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் பெங்களூரில் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன.

இந்நிலையில், பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், 'வர்த்தக காஸ் சிலிண்டர்களை வழக்கம் போல் வினியோகிக்க வேண்டும். சிலிண்டர் வினியோகத்தை நிறுத்துவது, சட்டத்துக்கு எதிரான செயல்.

'ஹோட்டல் துறைகள் எல்.பி.ஜி., காஸ் சிலிண்டர்களை நம்பி உள்ளன. காஸ் வினியோகம் நிறுத்தப்பட்டதால், ஹோட்டல் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் தெருவுக்கு வந்துவிட்டனர். எனவே, எல்.பி.ஜி., சிலிண்டர்களை தடையின்றி வினியோகிக்க, உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளனர்.

இம்மனு, நீதிபதி சச்சின் சங்கர் மகடம் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'பெங்களூரு நகரில் 40,000 ஹோட்டல்கள் உள்ளன. இதை நம்பி, 6 லட்சம் பேர் உள்ளனர். தினமும் 12 லட்சம் லிட்டர் பால், காய்கறிகள், பழங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹோட்டல்கள் மூடப்பட்டால், பலரும் பாதிக்கப்படுவர். எனவே, வழக்கம் போல் காஸ் வினியோகிக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.

மத்திய, மாநில அரசு தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், 'சிலிண்டர் வினியோகம் தொடர்பான விவகாரம், அரசின் கொள்கைகள், விதிமுறைகள் சார்ந்த விஷயம். இது தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்க அவகாசம் தேவைப்படும்' என்றனர்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'எல்.பி.ஜி., சிலிண்டர்களை வினியோகிக்கும் நடைமுறை குறித்தும், மார்ச் மாதத்தில் மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்ட சிலிண்டர்களின் அளவு குறித்தும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என்று மத்திய, மாநில அரசுக்கு உத்தரவிட்டு, மார்ச் 23ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Advertisement