மயங்கிய அரசு பஸ் கண்டக்டர்: மருத்துவமனைக்கு 'பறந்த' டிரைவர்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அரசு பஸ்சில் மயங்கி விழுந்த கண்டக்டரை காப்பாற்ற டிரைவர் பயணிகளுடன் பஸ்சை அரசு மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்தார்.


ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் இருந்து தஞ்சாவூருக்கு நேற்று முன்தினம் மதியம் 12:00 மணிக்கு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் மாவட்டம் காசநாடு பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் 28, ஓட்டினார். ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த விவேகானந்தன் 30, கண்டக்டராக இருந்தார். ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பஸ் வந்த போது கண்டக்டர் விவேகானந்தன் மயங்கி விழுந்தார்.

டிரைவர் தாமரைச்செல்வன் பஸ்சை நிறுத்தி எழுப்புவதற்கு முயன்றார். மயக்கம் தெளியாததால் பஸ்சை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றார்.

அவசர சிகிச்சை பிரிவு முன் பஸ்சை நிறுத்தி விவேகானந்தனை சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பரிசோதித்த டாக்டர்கள் அதிக காய்ச்சல் காரணமாக கண்டக்டர் மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர்.

இதன்பின் மாலை 4:00 மணிக்கு பஸ்சை மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றனர். பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்புலன்சை எதிர்பாராமல் விரைவாக செயல்பட்ட டிரைவரை பயணிகள் பாராட்டினர்.

Advertisement