குடியிருப்பில் தீ பற்றியதால் சோகம்; இந்துாரில் 7 பேர், டில்லியில் 9 பேர் பலி

2

நமது நிருபர்




மத்திய பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அதேபோல் டில்லியிலும் குடியிருப்பு பகுதியில் தீ பற்றியதில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர்.


மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பிரிஜேஸ்வரி அனெக்ஸ் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இன்று (மார்ச் 18) அதிகாலை திடீரென தீ பற்றியது. பிறகு குடியிருப்பு முழுவதும் தீ மள மளவென பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் விரை ந்தனர். இதைத் தொடர்ந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ பற்றியதற்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து போலீசார் கூறியதாவது: தீ பற்றிய வீட்டிலிருந்து 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.



தீ பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் தீ மேலும் தீவிரமடைந்தது. இதுவே பலி எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

டில்லியில் 9 பேர் பலி



அதேபோல், டில்லி பாலம் பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயை அணைக்கவும், உள்ளே சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நடந்தன. ஆனாலும், தீயில் கருகி 3 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Advertisement