வாட்ஸ் அப்பில் 'ஹாய்' போதும் காவல்துறை சேவை தேடிவரும்

மேட்டுப்பாளையம்: கோவை ரூரல் போலீஸ் சார்பில் 'டிஜி காப் வாட்ஸ் அப்' சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள போலீசார் கேட்டுக் கொண்டனர்.

கோவை ரூரல் போலீஸ் சார்பில், பொதுமக்களின் வசதிக்காக கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ்அப் சேவையை அண்மையில் ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிமுகப்படுத்தினார். சாட்பாட் என்னும் இந்த சேவையை பயன்படுத்த உங்கள் போனில் இருந்து போலீசார் தெரிவித்துள்ள 98400 - 91100 என்ற எண்ணைச் சேமித்து, வாட்ஸ்அப்பில் ஹாய் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதும். இதன் வாயிலாக போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் செல்லாமலேயே, பல்வேறு சேவைகளைப் பெற முடியும்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., பாஸ்கர் கூறியதாவது:-

இந்த வாட்ஸ் அப்பில் உள்ள சாட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இயங்குகிறது. இதில் அவசர கால எண்கள் மற்றும் உதவி மையத் தொடர்புகள் குறித்த தகவலை பெறலாம். மக்கள் அளித்த புகாரின் தற்போதைய நிலையை அறியலாம்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை ஆன்லைனில் செலுத்தலாம். இணையவழி குற்றங்கள் குறித்து புகார் அளிக்க வழிகாட்டுதல் மற்றும் மொபைல் போன் தொலைந்தால் புகார் அளிக்கும் வசதி.

போதைப் பொருள் விற்பனை அல்லது குற்றச் செயல்கள் குறித்து உங்கள் பெயரை வெளிப்படுத்தாமல் ரகசியமாக தகவல் பகிரலாம்.

இரவு பணியில் இருக்கும் ரோந்து அதிகாரிகளின் விவரங்களை அறியலாம். நம் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனை கண்டறியலாம்.

இந்த எண்ணைச் சேமித்து வைப்பது அவசர காலங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து, ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் வழிகாட்டுதல் படி, மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம், அன்னூர், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களும் ஆர்வமாக இந்த எண்ணை சேமித்து வைக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

----

Advertisement