ராஜேந்திரா ரோட்டில்  நெரிசல் நிரந்தரம்

உடுமலை: பிரதான ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகியும் எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

உடுமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கும் ராஜேந்திரா ரோட்டில், தினசரி, வாரச்சந்தை, அரசுப்பள்ளி, அண்ணா பூங்கா, ரயில்வே ஸ்டேஷன் என மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகள் வரிசையாக அமைந்துள்ளன.

பிரதான ரோடாக இருப்பதால், பிற ரோடுகளை விட காலை, மாலை நேரங்களில் வாகன நெரிசல் கூடுதலாக இருக்கும்.

இந்த ரோட்டில், இருபுறங்களிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு, வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாக உள்ளது.

அண்ணா பூங்கா வரை வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பிரச்னை குறித்து நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ், நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இதனால், நெரிசலில், தவிக்கும் வாகன ஓட்டுநர்கள் அரசுத்துறைகள் மீது அதிருப்தியில் உள்ளனர். மேலும் தினசரி சந்தைக்கு வரும் வாகனங்களும் நாள்தோறும் நெரிசலில் சிக்கி, தேசிய நெடுஞ்சாலைக்கு வர நீண்ட நேரமாகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகனங்களை நிறுத்தி பார்க்கிங் ஏரியவை வரையறை செய்ய அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement