டீசல் இன்ஜினை மின்சார இன்ஜினாக மாற்றியதால் ரூ.6 ஆயிரம் கோடி சேமித்தது ரயில்வே

15


புதுடில்லி: ரயில் இயக்கத்தை டீசல் இன்ஜினில் இருந்து மின்சார இன்ஜினுக்கு மாற்றியதால் இந்திய ரயில்வே 6,000 கோடி ரூபாயைச் சேமித்துள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

லோக்சபாவில் ரயில்வே அமைச்சகத்திற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது: நாட்டின் முக்கியமான ஒன்றாக ரயில் போக்குவரத்து உள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய சரக்குப்போக்குவரத்து நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ரயில்களை இயக்குவதற்கு டீசலிலிருந்து மின்சக்திக்கு மாறியதன் மூலம், இந்திய ரயில்வே 6,000 கோடி ரூபாயைச் சேமித்துள்ளது.


டீசல் இன்ஜின்கள்




பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சிக்காலத்தில், 35,000 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. 27,000 கி.மீ. ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் செலவினங்களில் ஊழியர்களுக்கான ஊதியமே மிகப்பெரிய பங்காக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக எரிசக்திச் செலவு இரண்டாவது மிகப்பெரிய செலவினமாக இருக்கிறது. வருங்காலத்தில் டீசல் இன்ஜின்கள் எல்லாம் படிப்படியாக குறைக்கப்பட்டு முழுமையாக மின்சாரத்தில் ரயில்கள் இயக்கப்படும்.

நிதி ஒதுக்கீடு




2014ம் ஆண்டில் பாஜ அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, 'வாக்கு அரசியலுக்கு' மாற்றாக 'செயல்திறன் அரசியல்' (politics of performance) முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஒரு தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய முடிவாக, ரயில்வே பட்ஜெட்டைப் பொது பட்ஜெட்டுடன் இணைக்க பிரதமர் மோடி முடிவெடுத்தார். இதன் விளைவாக ரயில்வே அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு கணிசமாக அதிகரித்துள்ளது.


முன்பெல்லாம் இல்லாத வகையில், தற்போது ஆண்டு முழுவதும் புதிய ரயில்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. புதிய திட்டங்கள் தொடங்கப்படுகிறது. ரயில்வே துறையின் நிதி நிலைமை வலுப்பெற்று உள்ளது. கணக்கு விவரங்களை வெளியிடுவதில் வெளிப்படைத்தன்மையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.


இந்த விவாதத்தில், மொத்தம் 210 எம்பிக்கள் கலந்துகொண்டனர். விவாதத்தின் இறுதியில், 2026-27 நிதியாண்டிற்கான ரயில்வே அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகளை லோக்சபா ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்தது.

Advertisement