தேர்தல் நடத்தை விதிமுறை :171 துப்பாக்கி ஒப்படைப்பு

பெரம்பலுார்:தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அரியலுார் மற்றும் பெரம்பலுார் மாவட்டத்தில், 171 துப்பாக்கிகள், போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டன.


இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மார்ச், 15 மாலை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன.
'முறையான அனுமதி பெற்று, துப்பாக்கி வைத்திருப்போர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், அதனை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும்' என, பெரம்பலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அனிதா மற்றும் அரியலுார் மாவட்ட போலீஸ் எஸ்.பி., விஸ்வேஷ் சாஸ்திரி ஆகியோர் உத்தரவிட்டனர்.


இதன்படி, அரும்பாவூர் போலீஸ் ஸ்டேஷனில், 32 துப்பாக்கிகள் மற்றும் பெரம்பலுார் டவுன் மற்றும் ஊரக போலீஸ் ஸ்டேஷன்களில், 35 துப்பாக்கிகள் உட்பட, பெரம்பலுார் மாவட்டத்தில் மொத்தம், 86 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதேபோல், அரியலுார் மாவட்டத்தில், 85 துப்பாக்கிகள் போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Advertisement