வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை நிறுத்துங்கள்; ஈரானுக்கு சவுதி அரேபியா எச்சரிக்கை

9

நமது நிருபர்




வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் கூறியதாவது: ஈரான் மோதலில் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதே தங்களின் உடனடி முன்னுரிமை. பிராந்திய ஸ்திரத்தன்மையின் மீது சவுதி அரேபியா கவனம் செலுத்துகிறது. தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர சவுதி அரேபியா தன்னிடம் உள்ள அனைத்து அரசியல், பொருளாதார மற்றும் ராஜதந்திர வழிகளையும் பயன்படுத்தும்.



வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரான் நிறுத்த வேண்டும். தொடர்ந்து தாக்கப்பட்டால் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஈரானுடன் முன்பு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது.


ஈரானின் மிரட்டல் முயற்சியை கண்டு அச்சப்படவில்லை. ஈரான் தனது தவறான கணிப்புகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் எந்தப் பலனையும் அளிக்காது. இந்தத் தாக்குதல்களுக்கு ஈரான் முன்கூட்டியே தயாராக இருந்து இருக்கிறது.


ஈரானியர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஈரான் தாக்குதல்களைத் தொடர்ந்து, தேவை எனக் கருதினால் ராணுவ நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை சவூதி அரேபியா கொண்டுள்ளது.


தன்னிடமும் எதிர்கொள்ள பலமும் இருக்கிறது. கடல்வழிப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் கூட்டு சர்வதேச நடவடிக்கை தேவை. இவ்வாறு சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் தாக்குதல்





கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலை மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராஸ் லபானில் ஏற்பட்ட மூன்று தீ விபத்துகளில் இரண்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கத்தார் தெரிவித்துள்ளது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கத்தார் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கத்தார் மீண்டும் தாக்கப்பட்டால், ஈரானின் எரிவாயு கிடங்கு மீது பெரும் தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement