சீமைக்கருவேல மரங்களை அகற்ற நீதிபதிகள் தலைமையில் குழு; உயர்நீதிமன்றம் உத்தரவு


மதுரை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற தாக்கலான பொதுநல வழக்கில்,அம்மரங்களை அகற்றும் பணியை கண்காணிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், வி.பாரதிதாசன் கொண்ட சிறப்புக் குழுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அமைத்துள்ளது.


ம.தி.மு.க.,பொதுச் செயலாளர் வைகோ 2015 ல் தாக்கல் செய்த பொதுநல மனு: சீமைக்கருவேல மரங்கள் நிலத்தடி நீர், காற்றிலுள்ள ஆக்சிஜன், ஈரப்பதத்தை உறிஞ்சுவதால் வெப்பம் அதிகரிக்கிறது. விவசாயம், சுற்றுச்சூழலை பாதிக்கிறது. சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை கோரி தமிழக தலைமைச் செயலர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி அமர்வு முன் வைகோ ஆஜரானார்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

* மனுதாரர் மற்றும் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பரிந்துரைகளை சமர்ப்பித்தனர். இவற்றை பரிசீலித்து கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை பிறப்பிக்கிறோம்.
* சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள இடங்களிலிருந்து வேருடன் இயந்திரங்களின் உதவியுடன் அகற்ற வேண்டும். அங்கு உள்ளூர் இன தாவரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். இத்திட்டத்திற்கு 'செழுமை கருவூலம்' என பெயரிட வேண்டும்.

* இத்திட்டத்தை அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாத வகையில், இயன்றவரை செயல்படுத்த வேண்டும். இம்முயற்சியில் அரசுடன் இணைந்துமக்கள், மாணவர் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், பெருநிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய அனைவரும் பங்கேற்பதன் மூலமே திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இயலும்.



* தனியார் மற்றும் பொது நிலங்களில் உள்ள இம்மரங்களை அகற்றியபின், அங்கு உள்ளூர் இன தாவரங்களை நடுவதற்கு பொறுப்பான அதிகாரி கலெக்டர். வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ், பொதுப்பணித்துறை, நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கும் தேவையான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் கலெக்டர்களுக்கு வழங்கப்படுகிறது.


* தமிழக அரசின் வனத்துறை செயலர் அத்துறையின் இணையதளத்தில் இத்திட்டத்திற்கென ஒரு பிரத்யேக வலைத்தள பக்கத்தை உருவாக்க வேண்டும்.
* அரசு செயலரால் ஒரு அலைபேசி எண் பராமரிக்கப்பட வேண்டும். அதை சமூக வலைத்தளங்களுடன் இணைக்க வேண்டும். சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதி குறித்து யாரும் பதிவிடலாம். அத்தகவல் உரிய கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

* தகுந்த மரக்கன்றுகளை நடவு செய்வதற்காக வனப் பாதுகாவலர், வேளாண்துறை இயக்குனரை கொண்ட குழுவை மாநில அளவில் அமைக்க வேண்டும்.



* ஏலம் விடுதல் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக ஏலம் விட வேண்டும். ஏலதாரர் சீமைக்கருவேல மரங்கள் அல்லது செடிகளை இயந்திரங்கள் மூ லம் வேரோடு அகற்ற வேண்டும். அவை மீண்டும் முளைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.


* தனியார் நில உரிமையாளர்கள் 30 நாட்களுக்குள் தங்களின் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற வேண்டும். செய்யத் தவறும்பட்சத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அல்லது கலெக்டரால் நியமிக்கப்படும் பிற அலுவலர்கள் தனியார் நிலங்களை ஆய்வு செய்வர். அம்மரங்களை அகற்றுவதற்கான செலவு தொகை நில உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படும்.


* தங்கள் நிலங்களில் உள்ளூர் இன மரக்கன்றுகளை நட விரும்பும் தனியார் நில உரிமையாளர்களுக்கு, இலவசமாக கன்றுகள் வழங்கப்படும்.


* தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகள், அறநிலையத்துறை, ரயில்வேத்துறை அல்லது தொடர்புடைய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.


* பருவமழைக்கு முன் அடுத்த பருவமழை துவங்குவதற்கு முன் அகற்றும் பணியை நிறைவு செய்ய வேண்டும். இதன் மூலம், பருவமழைக் காலத்தில் உள்ளூர் இன தாவரங்களை நட்டு வளர்க்க இயலும்.


* சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை குறிப்பிட்ட காலவரம்பிற்குள் தடையின்றி நடைபெறுவதை, திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய மேற்பார்வையிட, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம், வி.பாரதிதாசன் கொண்ட சிறப்புக் குழுவை நியமிக்கிறோம்.
* உயர்நீதிமன்றக் கிளையின் அதிகார வரம்பிற்குட்பட்ட தென் மாவட்டங்களில் நடைபெறும் பணிகளை நீதிபதி செல்வம், சென்னை உயர்நீதிமன்ற அதிகாரவரம்பிற்குட்பட்ட வட மாவட்டங்களில் நடைபெறும் பணிகளை நீதிபதி பாரதிதாசன் கண்காணிப்பர். விசாரணை ஏப்.17 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


@block_G@

மகிழ்ச்சியான நாள்

வைகோ கூறியதாவது: நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த இந்நாள் மகிழ்ச்சியான நாள். ஏற்கனவே நான் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டேன். தற்போது தேர்தல் என்பதால் அப்பணியில் நான் அதிகம் ஈடுபட முடியாது. தேர்தல் முடிந்தபின் முழுமையாக ஈடுபடுவேன் என்றார்.block_G

Advertisement