புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று உண்டு! 2 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களுக்கு நெருக்கடி
புதுச்சேரியில் உள்ள 30 சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் இரண்டு நாட்களில் மனு தாக்கல் 'டல்' அடித்தது. சுயேச்சைகள், அரசியல் கட்சி வேட்பாளர்கள் என, ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் 12 பேர் மனு தாக்கல் செய்தனர்.
நான்காம் நாளான நேற்று பாட்டிமை. பொதுவாக பாட்டிமையில், புதிய சுபகாரியங்களைத் தொடங்குவதைத் தவிர்ப்பது வழக்கம். இருப்பினும் இந்த நம்பிக்கையை பொருப்படுத்தாமல் புதுச்சேரியில் 3 பேரும், காரைக்காலில் 2 பேர் என, மொத்தம் 5 பேர் மனு தாக்கல் செய்தனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 17 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனு காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை அலுவலக நாட்களில் பெறப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ஆனால் இன்று 20ம் தேதி ரமலான் பண்டிகை என்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களுக்குஅரசு விடுமுறை அளித்து, ஏற்கனவே அரசிதழில் தெரிவித்து இருந்தது.
ஆனால், ரமலான் பண்டிகையை பொருத்தவரை பிறை தோன்றுவதை பொருத்தே அறிவித்து விடுமுறை விடப்படும். ஆனால், பிறை தோன்றவில்லை. எனவே, 20ம் தேதிக்கு பதிலாக 21ம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று டவுண் காஜியார் அறிவித்துள்ளார்.
எனவே இன்று 20ம் தேதி அரசு அலுவல நாட்களாகவும், நாளை 21ம் தேதி புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் ரமலான் பண்டிகையாக பொது விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே இன்றைக்கு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களில் தேர்தல் அலுவலகங்கள் திறந்து இருக்கும். காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம்.நாளை சனிக்கிழமை 21ம் தேதி, மறுநாள் ஞாயிறு 22ம் தேதி பொது விடுமுறையாக உள்ளது. இந்நாட்களில் மனுக்கல் பெறப்படாது.
எனவே இன்றைக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் வாய்ப்பினை விட்டால் திங்கள்கிழமை 23ம் தேதி மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும் என்பதால் அனைத்து வேட்பாளர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மாகியில் நாளை வேட்பு மனு
புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் இன்று 20ம் தேதி தேர்தல் அலுவலகங்கள் திறந்து இருந்தாலும், மாகிக்கு இன்று பொது விடுமுறையில் விடப்பட்டுள்ளது. இதில் மாற்றம் இல்லை என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இன்றைக்கு மாகியில் வேட்பு மனு பெறப்படாது. எனினும் நாளை 21 ம் தேதி வழக்கம்போல வேட்பு மனுக்கள் பெறப்படும் என, மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
பிரசாரம் செலவு விலை பட்டியல் அரசியல் கட்சியினருக்கு 'ஷாக்'
-
அரை அடி உயரத்தில் தடுப்பணை மழைநீர் தேங்குவதில் சிக்கல்
-
தினமலர் செய்தி எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் துவக்கம் கடம்பத்துார் மக்கள், பயணியர் மகிழ்ச்சி
-
அபாய நிலையில் அரசு கட்டடங்கள் இடித்து அகற்ற மக்கள் கோரிக்கை
-
கட்சி சின்னங்களை அழிப்பதில் சுணக்கம் காட்டும் தேர்தல்குழு
-
வடாரண்யேஸ்வரர் கோவிலில் 22 ல் பங்குனி உத்திர விழா துவக்கம்