தினமலர் செய்தி எதிரொலி: ரயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் துவக்கம் கடம்பத்துார் மக்கள், பயணியர் மகிழ்ச்சி
கடம்பத்துார்: கடம்பத்துார் ரயில் நிலையத்தில் கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணி, நேற்று மீண்டும் துவக்கப்பட்டது. இதனால், ரயில் பயணியர் மற்றும் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் கடம்பத்துார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இப்பகுதியில், 2015ம் ஆண்டு 14.50 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்ட ரயில்வே மேம்பால பணி, ஆறு ஆண்டுகளுக்கு பின் நிறைவடைந்து, 2022ம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
அதன்பின், கடவுப்பாதை நிரந்தரமாக மூடப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, 2022 டிசம்பரில், 5.50 கோடி ரூபாய் மதிப்பில், சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
ஆறு மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, ரயில்வே துறையினர் தெரிவித்த நிலையில், நான்கு ஆண்டுகளாகியும் எவ்வித பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால், கடவுப்பாதையை கடந்து சென்ற பொதுமக்கள், 40 பேர் வரை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தென்னக ரயில்வே துறை உத்தரவுப்படி நேற்று, சென்னை தென்னக ரயில்வே துறை திட்ட பணிகள் கூடுதல் கோட்ட பொறியாளர் சீனிவாசன், சுரங்கப்பாதை பணிகளை துவக்கி வைத்தார்.
இந்த சுரங்கப்பாதை பணிகளை மூன்று மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, நிர்வாக பொறியாளர் தெரிவித்தார். இது, கடம்பத்துார் ரயில் பயணியர் மற்றும் அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், ரயில்வே பகுதியில் பணிகள் நிறைவடைந்த பின், நெடுஞ்சாலை பகுதியில் சுரங்கப்பாதை பணிகளை துவக்கி, ஓராண்டில் பயன்பாட்டிற்கு வருமென, நெடுஞ்சாலை துறை அதிகாரி தெரிவித்தார்.
மேலும்
-
தாய், மகளை திட்டிய வாலிபர் கைது
-
மோட்டார் திருடிய சகோதரர்கள் கைது
-
பள்ளி வாசல்களில் ரம்ஜான் தொழுகை
-
உடைகிறது திமுக கூட்டணி; தனித்துப்போட்டியிட மார்க்சிஸ்ட் தயார்!
-
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியீடு
-
புதுச்சேரியில் ஏப்ரல் 4, 5 தேதிகளில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி: அனைத்து கல்வி சந்தேகங்களையும் தீர்த்து கொள்ள அரிய வாய்ப்பு