அபாய நிலையில் அரசு கட்டடங்கள் இடித்து அகற்ற மக்கள் கோரிக்கை

கொப்பூர்: கொப்பூர் பகுதியில் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கிளை நுாலகம் உள்ளிட்ட அரசு கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடம்பத்துார் ஒன்றியம் கொப்பூர் ஊராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஏ.ஓ., அலுவலகம் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இங்கு பணியாற்றும் வி.ஏ.ஓ., கிராம உதவியாளர் மற்றும் பகுதி மக்கள் அச்சத்தில் வந்து செல்கின்றனர்.

மேலும், மழைக்காலத்தில் தண்ணீர் கசிவதால், ஆவணங்கள் நனைந்து வீணாகி வருகின்றன. இதுகுறித்து, பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், ஊராட்சி அலுவலகம் மற்றும் கிளை நுாலகம் ஆகிய அரசு கட்டடங்களும் சேதடைந்து, பயன்பாடில்லாமல் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

எனவே, கொப்பூர் பகுதியில் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, வி.ஏ.ஓ., அலுவலகம், கிளை நுாலகம் மற்றும் ஊராட்சி அலுவலக கட்டடங்களை இடித்த அகற்றி விட்டு, புதிதாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement