அரை அடி உயரத்தில் தடுப்பணை மழைநீர் தேங்குவதில் சிக்கல்

பொன்னேரி: சிறுபழவேற்காடில் நீர்வரத்து கால்வாயின் குறுக்கே, சரியான திட்டமிடல் இன்றி, அரை அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால், மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மீஞ்சூர் ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ், 2020 -2023ம் ஆண்டில், 7.84 கோடி ரூபாயில் நீர்வரத்து கால்வாய்களின் குறுக்கே, 189 சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டன.

இவை, கால்வாய்களில் மழைநீர் சேமிக்கவும், நிலத்தடி நீரை பாதுகாப்பதற்காகவும் கட்டப்பட்டன. கால்வாய்களின் குறுக்கே, ஒவ்வொரு தடுப்பணையும் 5 மீ., அகலம், 2 அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும்.

பொன்னேரி அடுத்த சிறுபழவேற்காடு பகுதியில், நீர்வரத்து கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை சுவர், அரை அடிக்கும் குறைவாக உள்ளது. குறைவான உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தடுப்பணையில், மழைநீர் தேங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது, தண்ணீரின்றி வறண்டுள்ளன.

இதேநிலை தான் பல்வேறு கிராமங்களிலும் உள்ளது. சரியான திட்டமிடல் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பு இன்றி தடுப்பணைகள் அமைக்கப்பட்டு, அதற்காக செலவிட்ட பணம் விரயமாகி உள்ளதாக கிராம மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement