பாலியல் வழக்கில் தண்டனை; முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் சரணடைய விலக்கு

16


புதுடில்லி: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைவதற்கான விலக்கை மேலும் நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸூக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புர மாவட்ட நீதிமன்றம், கடந்த 2023ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் ராஜேஷ் தாஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தள்ளுபடி செய்த நீதிபதி, உடனே சரணடைய உத்தரவிட்டார்.

தொடர்ந்து, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சரணடைவதில் இருந்து ஏற்கனவே உள்ள விலக்கை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், மறு ஆய்வு மனுவை விரைவாக விசாரித்து, வழக்கை முடிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஆணையிட்டனர்.

Advertisement