கூட்டணி கட்சி 'சீட்'டுக்கு வேட்டு வைக்கும் சீனியர்!
நா ட்டு சர்க்கரை டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''குடியிருப்பு பகுதியில் போதை மாத்திரை விற்பனை கொடிகட்டி பறக்குல்லா...'' என்ற அதிர்ச்சி தகவலை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, தாம்பரம் பக்கத்துல இருக்கிற குரோம்பேட்டை நியூ காலனி அன்னை இந்திரா நகர்ல, குடியிருப்புகளுக்கு மத்தியில நிறைய காலியிடங்கள் கிடக்கு... இந்த இடங்கள்ல, ராத்திரி நேரத்துல கூட்டம் கூட்டமா சிலர் வந்து கஞ்சா, போதை மாத்திரைகளை விற்பனை செய்யுதாவ வே...
''இதை வாங்க நிறைய வாலிபர்களும் வர்றாவ... அங்கனயே போதையை ஏத்திக்கிட்டு, பக்கத்துல இருக்கிற வீடுகள் மேல கற்களை வீசி ரகளை பண்ணுதாவ வே...
''போலீஸ்ல புகார் குடுத்தா, அவங்களே நம்மை காட்டி குடுத்துடுவாங்கன்னு பயப்படுற குடியிருப்பு வாசிகள் பீதியில இருக்காவ... பெரிய அளவுல அசம்பாவிதம் நடக்கிறதுக்கு முன்னாடி போலீசார் முழிச்சுக்கணும் வே...'' என்றார், அண்ணாச்சி.
''அனுபவமில்லாம சொதப்புறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''சென்னை, தரமணியில், தமிழக அரசின் வேதியியல் தொழில்நுட்ப பயிலகம் செயல்படுது... இங்க, மூணு வருஷம் டிப்ளமோ படிப்பை வழங்குறாங்க பா...
''இந்த கல்வி நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு, இன்ஜினியரிங் படிச்சவங்களை தான் நியமிப்பாங்க... ஆனா, இப்ப தலைமை பொறுப்பில் இருக்கும் பெண்மணி, ஆங்கில விரிவுரையாளரா இருந்தவங்க பா...
''இவங்களுக்கு தொழில்நுட்ப அனுபவம் இல்லாததால, 'லேப்'களுக்கு உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குறது எதுவும் நடக்கல... மாணவர்கள் சேர்க்கையிலும் நிறைய குளறுபடிகளை பண்றாங்க பா...
''ஊழியர்களையும் அலைக்கழிக்கிறாங்க... வெறுத்து போன ஊழியர்கள், தொழில்நுட்ப கல்வி இயக்குநரை பார்த்து, 'இன்ஜினியரிங் துறையை சேர்ந்தவங்களை தலைமை பொறுப்புல நியமிக்கணும்'னு மனு குடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
மொபைல் போனை எடுத்து பார்த்த குப்பண்ணா, ''ஜானகி, 'மெசேஜ்' பண்ணியிருக்கா... அப்புறமா பேசிக்கலாம்...'' என, முணுமுணுத்தபடியே, ''கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,வுக்கு எதிரா செயல்படறார் ஓய்...'' என்றார்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருச்சி, மணப்பாறை தொகுதி எம்.எல்.ஏ.,வா, தி.மு.க., கூட்டணி கட்சியான, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலரான அப்துல் சமது இருக்கார்... இவர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷுடன் நல்ல நட்புல இருக்கார் ஓய்...
''மாவட்டத்தில் தனக்கு போட்டியா இருக்கற மகேஷுடன், அப்துல் சமது நட்புல இருப்பது, மூத்த அமைச்சர் ஒருத்தருக்கு பிடிக்கல... இதனால, மணப்பாறை தொகுதியை, தே.மு.தி.க.,வுக்கு தள்ளிவிட, காய் நகர்த்திண்டு இருக்கார் ஓய்...
''மூத்த அமைச்சர் பினாமியின் மச்சான், தே.மு.தி.க.,வில் மாவட்ட பொறுப்புல இருக்கார்... அவர்கிட்ட, 'மணப்பாறை தொகுதியை நீங்க கேளுங்க'ன்னு துாண்டி விடறார்... இதை கேள்விப்பட்டு, அப்துல் சமது ஆதரவாளர்கள் கோபத்துல இருக்கா ஓய்...
''இதனால, 'மூத்த அமைச்சர் தொகுதியில், அவரது வெற்றியை உறுதி பண்றது, முஸ்லிம்கள் ஓட்டுகள் தான்... எங்களுக்கு மணப்பாறை கிடைக்காம தடுத்தா, அவரது தொகுதியில நாங்க வேலையை காட்டிடுவோம்'னு சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''நேரு காலத்துல இருந்த காங்கிரஸ் வேற... இப்ப இருக்கிற காங்கிரஸ் வேறப்பா...'' என, நண்பரிடம் அன்வர்பாய் கதை பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.
All these AntiNation AntiNativePeople MuslimParties Survives due to DMKமேலும்
-
உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்க 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி
-
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையம் அருகே தீ விபத்து
-
எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா மார்ச் 28ல் திருக்கல்யாணம்
-
பரமக்குடி சட்டசபை தொகுதியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
-
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது