இதே நாளில் அன்று

மார்ச் 21:


சென்னையில், அரசு ஊழியராக இருந்த, பி.கே.ஞானசாகரத்தின் மகனாக, 1926, ஜனவரி 1ல் பிறந்தவர் மணி என்ற ஆனந்தகிருஷ்ணன்.
இவர், தி.நகர் அரசு பள்ளி, காயிதேமில்லத் அரசு கல்லுாரியில் படித்தார். சிறுவயதிலேயே நாடகங்களுக்கு சென்று, தன் கேமராவில் காட்சிகளை படமெடுப்பதில் ஆர்வமாக இருந்தார்.

என்.எஸ்.கிருஷ்ணன் படங்களின் கேமராமேன், சி.ஜே.மோகனின் உதவியாளராகி, கேமரா நுணுக்கங்களை கற்றார். இயக்குநர், நடிகர்களின் படங்களை எடுத்து, அவர்களது திரைப்படங்களின் பின்னணியை, 'பிலிம் நியூஸ்' உள்ளிட்ட பத்திரிகைகளில், 'பிலிம் நியூஸ் ஆனந்தன்' என்ற பெயரில் எழுதி, பிரபலமானார். நாடோடி மன்னன் திரைப் படத்தின் மக்கள் தொடர்பாளராகி, படத்தை பிரபலமாக்கினார்.

சிவாஜி கணேசனுக்கும் பி.ஆர்.ஓ.,வாக இருந்ததுடன், போலீஸ்காரன் மகள், ஊமை விழிகள், ஆசை, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஊமைப்படங்கள் முதல், 2016 வரையிலான படங்களின் வரலாற்றை, 'சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' என்ற பிரமாண்டமான நுாலாக வெளியிட்டார்.

'கலைமாமணி, திரைப்பட வரலாற்று செம்மல், கலா பீடம்' உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தன் 90வது வயதில், 2016ல் இதே நாளில் மறைந்தார்.

இவரது நினைவு தினம் இன்று!

Advertisement