தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை

திருத்தணி: தேர்தல் நடத்தை விதிமுறைகளை அனைத்து அதிகாரிகளும் கடைப்பிடித்து நேர்மையாகவும், அச்சம் இன்றியும் பணியாற்ற வேண்டும் என, தேர்தல் பார்வையாளர் நேற்று அறிவுறுத்தினார்.

தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், திருத்தணி சட்டசபை தொகுதிக்கு, வரவு - செலவு கணக்கு சரிபார்க்கும் தேர்தல் பார்வையாளராக ராஜேஷ் திரிபாதி நியமிக்கப்பட்டார்.

இவர், நேற்று திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். பின், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் கனிமொழி தலைமையில் நடந்த தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் வரவு - செலவு பார் க்கும் அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்பின், அவர் பேசியதாவது:

அடுத்த மாதம் நடைபெறும் சட்டசபை தேர்தலில் வாக்காளர்கள் அச்சம் இன்றி, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் நேர்மையாக தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும்.

எந்த ஒரு தேர்தல் அலுவலரும், அரசியல்வாதிகளுடன் நட்பு உணர்வோடு பழக கூடாது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள், தேர்தல் நேரத்தில் பரிசு பொருட்கள் வழங்குவது, பணம் பட்டுவாடா செய்வது போன்ற நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மொத்தத்தில், சட்டசபை தேர்தல் அமைதியாக நடப்பதற்கு தேர்தல் அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செந்தில், திருத்தணி தாசில்தார் குமார் உள்ளிட்ட வருவாய் துறை, காவல் துறை மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement