அனுமதியற்றதாக ஒரு கட்டடம் எப்போது கருதப்படும்?

க ட்டட அனுமதி பெற்றே கட்டடம் கட்ட வேண்டும். இல்லையேல் இடிக்கப்படும் என்பதே சட்டம். அதேபோல், அனுமதி பெற்றுவிட்டு மாற்றி கட்டினாலும் தவறு. கட்டுமானம் ஆரம்பித்தபின் மாற்றம் தேவையெனில் திருத்திய வரைபடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

கூடுதலான கட்டுமான பரப்பு இருப்பின் அதற்கு கட்டணம் செலுத்தவேண்டி இருக்கும். அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக அறை, போர்டிகோ, படிக்கட்டு போன்ற கூடுதல் கட்டுமானம் செய்யப்படும் பட்சத்தில், விதிகளுக்கு உட்பட்டு இருப்பின் வரன்முறைபடுத்த தக்கவை எனலாம். இல்லையெனில், விதிமீறிய கட்டுமானமாகவே கருதப்படும்.

சொத்துவரி விதிக்கப்படும்போது அனுமதிக்கப்பட்டதற்கு மேல் கட்டியிருந்தால் அந்த கூடுதல் கட்டட பரப்பிற்கு கட்டட அனுமதி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மாநகராட்சி பகுதியில் சதுர அடிக்கு ரூ.88 வீதம் கணக்கிட்டு, விடுபட்ட கட்டட அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கூடுதல் எவையென்று வருவாய் பிரிவு கணக்கிட்டு கட்டணம் கேட்பு அறிக்கை அளிக்கும். இதன்மீது கேள்வி ஏதேனுமிருந்தால் விளக்கம் கேட்டு பெறலாம். இல்லையெனில் கட்டணத்தை செலுத்தலாம். அடுத்தகட்டமாக சொத்து வரி கணக்கீடு நடைபெறும்.

இது கட்டுமானத்தின் மொத்த பரப்பு, பயன்பாடு மற்றும் பிற காரணிகளை பொறுத்து அமையும். வரி கேட்பு அறிக்கை அளிக்கப்பட்ட பின் கேள்வி இருந்தால் தெளிவு பெற்றுக்கொள்ளலாம்.

கூடுதல் கட்டுமானத்திற்கு கட்டட அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட்டாலும், அது அனுமதியற்ற கட்டுமானமாகவே கருதப்படும். இது உள்ளாட்சியின் அபராத கட்டணமாகவே வசூலிக்கப்படுகிறது. வருவாய் இழப்பையும் சரிக்கட்டுகிறது.

கூடுதல் கட்டுமானம் விதிகளுக்கு உட்பட்டிருந்தால் வரைமுறைக்கு உகந்தது. ஆகவே அனுமதிக்கப்பட்ட வரைபடத்தை மீறாத கட்டுமானம் சிறந்தது. மாற்றம் வேண்டுமெனில் திருத்திய வரைபட அனுமதி பெற்று கட்டிக்கொள்ளலாம்.

-கனகசுந்தரம்

பொறியாளர்கள் சங்க (கோவை)முன்னாள் தலைவர்.

Advertisement