மலைப்பகுதி ஒட்டுச் சாவடிகளில் நக்சல் தடுப்பு போலீசார் கண்காணிப்பு

கம்பம்: தேனி மாவட்டத்தில் மலைப்பகுதி ஓட்டுச் சாவடிகள், மலையடிவார கிராம ஓட்டுச் சாவடிகளை ஏ.என்.எஸ். எனப்படும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி என நான்கு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த நான்கு தொகுதிகளிலும் 1375 ஒட்டுச் சாவடிகள் உள்ளன. இதில் ஆண்டிபட்டி தொகுதியில் சுருளியாறு மின் நிலையத்தில் உள்ள ஒட்டுச் சாவடி, ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜா மெட்டு, இரவங்கலாறு ஓட்டுச் சாவடிகள் மற்றும் வெள்ளிமலை, அரசரடி, இந்திராநகர் போன்ற ஒட்டுச் சாவடிகள் மலைப்பகுதியில் உள்ளன.

போடி தொகுதியில் அகமலை, குரங்கணி, பெரியகுளம் தொகுதியில் சில ஒட்டுச் சாவடிகளும் மலைப்பகுதியில் அமைந்துள்ளன.

மலைப்பகுதிகளிலும், மலையோர கிராமங்களில் உள்ள ஒட்டுச் சாவடிகளை நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள் முதல் தேர்தல் முடிந்து, ஒட்டுப் பெட்டிகள் ஒட்டு எண்ணும் மையங்களுக்கு செல்லும் நாள் வரையிலும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட ஒட்டுச்சாவடிகளை தீவிர கண்காணிப்பிற்குள் வைத்திருப்பார்கள்.

Advertisement