அனுமதியற்ற மது விற்பனை தாராளம் தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டிலும் கரை வேட்டியினர் ஆதிக்கம்

கன்னிவாடி: தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் அரசு துறைகள் வந்தபோதும் பரவலாக அனுமதியற்ற மது விற்பனை அமோகமாக நடக்கிறது.

செம்பட்டி, ஆத்துார், காமுபிள்ளைசத்திரம், மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல், பழைய வக்கம்பட்டி, என்.பஞ்சம்பட்டி, செட்டியபட்டிபிரிவு, மில் மேடு, பித்தளைப்பட்டி, சின்னாளபட்டி பண்ணைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, வட்டப்பாறை, கோனுார், குட்டத்துப்பட்டி, முத்தனம்பட்டி, கரிசல்பட்டி, அச்சாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மது விற்பனை தாராளமாக நடக்கிறது சில மாதங்களுக்கு முன் நடந்த நல உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் மகளிர் அளித்த புகாரில் பெரும்பாலானவை மூடப்பட்டன. வருவாய் பாதிப்பதாக கூறி கரை வேட்டி நபர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் 4 நாட்களில் மீண்டும் அவை செயல்பட துவங்கின. இதை தொடர்ந்து கிராமங்கள், மெயின்ரோடுகளில் இதுபோன்ற விற்பனை தாராளமாக நடக்கிறது.

டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'செம்பட்டி, சின்னாளபட்டி அம்பாத்துறை பகுதிகளில் அனுமதியற்ற விற்பனை வெளிப்படையாக நடக்கிறது.

டாஸ்மாக் கடைகளில் பெட்டிகளாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு சில்லரை விற்பனையில் ஈடுபடுகின்றனர். இரவு, பகல் என எந்நேரமும் மது கிடைப்பதால் பெரும்பாலோர் அனுமதியற்ற விற்பனைப்பகுதியை நாடி செல்கின்றனர்.

தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் அரசு துறைகள் வந்தபோதும் அரசியல் பிரமுகர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.

அரசு வருவாயை தனிநபர்கள் சுரண்டும் போக்கும் நீடிக்கிறது. அரசியல் தலையீடு காரணமாக போலீசார் கண்டு கொள்வதில்லை.

தொழில் போட்டியால் கொடைரோடு பகுதியில் போலி மது மூலம் பலர் பலியான சம்பவங்கள் நடந்துள்ளன. இப்பிரச்னையில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்' என்றனர்.

Advertisement