காதல் மனைவி வெட்டிக் கொலை; சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, மனைவியை வெட்டி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 45;. லாரி டிரைவர். இவரது மனைவி ரேணுகா, 37; கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 3 மகன்கள் உள்ளனர்.

கோவிந்தன், மனைவி ரேணுகா மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால், ரேணுகா சில தினங்களுக்கு முன் கோவிந்தனுடன் வாழ விருப்பமில்லை என திருவெண்ணெய்நல்ல்லுார் போலீசில் புகார் அளித்தார். பின், அதே கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 8:30 மணியளவில் அப்பகுதியில் உள்ள முள் தோப்பிற்கு இயற்கை உபாதைக்காக ரோணுகா சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கோவிந்தன், கத்தியால் ரேணுகாவை தலையில் வெட்டினார். படுங்காயமடைந்த ரேணுகா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ரேணுகாவை மீட்டு மீட்டு திருவெண்ணெய்நல்லுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே ரேணுகா இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து கோவிந்தனை கைது செய்தனர்.

Advertisement