l தேர்தல் சமயத்திலாவது வாக்குறுதிகள் l புதிய குடியிருப்புகளில் தேவை அடிப்படை வசதிகள்

ராஜபாளையம்:மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட புறநகர் குடியிருப்பு பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாகியும் குடிநீர், ரோடு போன்ற அடிப்படை வசதிகளுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கும் சூழல் உள்ளது. தேர்தல் நேரத்திலாவது இதற்கான வாக்குறுதிகளை மக்கள் அரசியல்வாதிகளிடம் எதிர்பார்த்து உள்ளனர். மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சி கிராமப் பகுதி என மக்கள் பெருக்கத்திற்கு ஏற்ப புறநகர் பகுதிகளில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.

விலை குறைவு விசால மான இடம் போன்ற காரணங்களால் இவை வேகமாக உருவாகின்றன. ரியல் எஸ்டேட் துறை யினரும் புதிய குடியிருப்பு களை ஏற்படுத்திவிட்டு தங்கள் பங்கை முடித்து விடுகின்றனர்.

குடியிருப்பு வாசிகள் தங்கள் பங்குக்கு குடியிருப்பு நல சங்கங்கள் அமைத்தும் உள்ளாட்சி நிர்வாகங்களிடம் மனு வழங்கியும் சாலை, குடிநீர் குழாய், குப்பை அகற்றம் போன்ற சேவைகளில் முன்னேற்றம் இல்லை.

குறிப்பாக வீடுகளில் வெளியேறும் கழிவு நீர் வாறுகால் இல்லாமல் ரோட்டில் தேங்குவதும், மழைக்காலங்களில் தற்காலிக சாலைகளை பயன்படுத்த முடியாத அளவு சகதியாக மாறியும், தெரு விளக்கு, குப்பை கழிவுகள் அகற்றல், சுகாதாரமான குடிநீருக்கு அல்லாடுவதும், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட அணுக முடியாமல் சிரமத்தில் வசிக்கின்றனர்.

இருப்பினும் புறநகர் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளிடம் வீடுகள் கட்ட முறையான அனுமதி பெற்று அரசுக்கான வரிகளை செலுத்தி வருகின்றனர்.

நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் அருகிலுள்ள புறநகர் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவது இல்லை.

ஒரு சில பகுதிகளில் 25 ஆண்டுகளுக்கும் மேல் வீடுகளை கட்டி குடியேறி யும் நகராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு கிடைக்கும் குடிநீர், சாலை, மின் விளக்கு, சாக்கடை வசதிகள் கிடைக்கவில்லை.

வேறு வழியின்றி திறந்த வெளிகளில் குப்பையை கொட்டி எரிப்பதும், சாக்கடையை அருகில் உள்ள காலி மனைகள், ரோட்டின் நடுவே என தேங்க விடுவதால் சுகா தாரக்கேடு ஏற்படுகிறது.

தற்போது தேர்தல் நேரம் நெருங்குவதால் இத்தனை ஆண்டுகள் நிதி பற்றாக்குறை என கூறி வந்தவர்கள் புறநகர் பகுதிகளை தேடி வந்து இதற்கான சாத்தியக்கூறுகளை வாக்குறுதிகளாக வழங்கும் நிலை ஏற் பட்டுள்ளது.

எனவே புறநகர் பகுதி குடியிருப்புவாசிகள் அடிப்படை வசதிகளுக்கு தீர்வுகளாக மாறும் என அரசியல்வாதிகளுக்கு காத்திருக்கின்றனர்.

Advertisement