மதுக்கடை திறக்க கண்டனுாரில் எதிர்ப்பு
காரைக்குடி:கண்டனுாரில் போலீஸ் செக்போஸ்ட் மற்றும் ரயில்வே கேட் நடுவே தனியார் மதுக்கடை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கண்டனுார் - புதுவயல் ரயில்வே ஸ்டேஷன் அருகில் 2 அரசு மது கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது 3 வதாக நவீன தனியார் மதுக்கடை திறப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு கலெக்டர் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். தவிர விதிமுறைகளை மீறி தனியார் மதுக்கடை திறந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: காரைக்குடி- அறந்தாங்கி செல்லும் சாலையான கண்டனுார் சாலையில் போலீஸ் செக்போஸ்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே கேட் உள்ளது. ரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே இரு மதுக்கடைகள் செயல்படுகிறது. இந்நிலையில் தற்போது போலீஸ் செக்போஸ்ட் மற்றும் ரயில்வே கேட் நடுவே 3வதாக தனியார் மதுக்கடை புதிதாக கட்டி திறக்கப்பட உள்ளது. அருகிலேயே நொண்டி கருப்பர் கோயிலும் உள்ளது. தினமும் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் சாலையை பயன்படுத்துகின்றனர். விதிமுறைகளை மீறி திறக்கப்பட உள்ள மதுக்கடையை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சாலை மறியலில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.