மயான இடம் மீட்க போராட்டம் தாசில்தார்கள் ஆய்வு

காரைக்குடி:காரைக்குடி அருகே இலுப்பக்குடி புதுக்குடியிருப்பு பகுதி மயானத்தை மீட்டுத்தர வலியுறுத்தி மக்கள் போராட்டம் அறிவித்த நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காரைக்குடி மற்றும் தேவகோட்டை தாசில்தார்கள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர்.

காரைக்குடி அருகேயுள்ள இலுப்பக்குடி புதுக்குடியிருப்பில் 250 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் பயன்படுத்திய 2 ஏக்கர் 5 சென்ட் மயானத்தை, தனியாருக்கு வழங்கியதாக தொடர்ந்து புகார் கூறுகின்றனர். இப்பகுதியில் உயிரிழந்தவர்களை புதைப்பதற்கு இடமில்லாமல் பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இந்நிலையில் கடந்த வாரம், மயானத்தை மீட்க வலியுறுத்தி வீடுகள் தோறும் கருப்புக்கொடி கட்டியும், போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகள், அவர்களை சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்ற உத்தரவின்படி காரைக்குடி தாசில்தார் ராஜா, தேவகோட்டை தாசில்தார் தங்கமணி மயான இடத்தை ஆய்வு செய்தனர்.

தாசில்தார் ராஜா கூறுகையில்:

புதுக்குடியிருப்பு காரைக்குடி தாலுகாவிலும், மயான இடம் தேவகோட்டை தாலுகாவிலும் உள்ளது. மயான இடம் குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றம் கேட்டதன் பெயரில் தற்போது நேரடியாக ஆய்வு செய்ததோடு, மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்துள்ளோம். நீதிமன்றத்திற்கு அறிக்கையை சமர்ப்பிப்போம் என்றார்.

Advertisement