போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவர் கைது

மயிலாடுதுறை;மயிலாடுதுறையில், போதையில் மனைவியை அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் அருகே துகிலி கிராமத்தை சேர்ந்தவர் அழகப்பன், 45; மயிலாடுதுறையில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாக்கியம், 35; ஒரு மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை கூரைநாடு டாஸ்மாக் மதுபான கடை எதிரே, மது போதையில் இருந்த அழகப்பன், தன்னுடன் வந்த மனைவியை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் நெற்றியில் பலத்த காயமடைந்த பாக்கியம் மயங்கி விழுந்துள்ளார். மது போதையில் இருந்த அழகப்பனும் மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் விரைந்து வந்து பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த பாக்கியம் மற்றும் போதையில் கிடந்த அழகப்பனையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாக்கியம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விசாரணையில், மது போதையில் அழகப்பன் தனது மனைவி பாக்கியத்தை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து, அழகப்பனை கைது செய்தனர்.

Advertisement