சட்டசபை தேர்தலை ஒட்டி அடகு கடைகள் கண்காணிப்பு
போடி: சட்டசபை தேர்தலை முன்னிட்டு அடகு கடைகளான பான் புரோக்கர், மணிலேண்டர், நகை அடகு கடைகளும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தேர்தல் கமிஷன் 'செக்' வைத்து உள்ளது.
சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் வங்கியில் கணக்கு துவக்கி தேர்தல் செலவு செய்ய வேண்டும். வங்கியில் ஒரு லட்சத்திற்கு மேல் பணம் எடுப்பதையும் கண்காணிக்கப்படுகிறது.
இதில் வங்கிகள் மட்டும் இன்றி தனியார் வட்டி கடைகள், நகை அடகு கடைகளும் கண்காணிப்பில் உள்ளன. வருவாய் துறையினரிடம் லைசென்ஸ் பெற்றுள்ள பான் புரோக்கர், மணிலேண்டர்களை கண்காணிக்க வருவாய் துறை அதிகரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அடகு வைத்த நகைகளை திருப்புவதற்கு அரசியல் கட்சியினருக்கு யாரேனும் முறைகேடாக உதவினால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும். அடகு வைத்த நகைகளை திருப்ப வாக்காளர்களுக்கு டோக்கன், அடையாள அட்டை வழங்கினால் ஏற்க கூடாது.
மொத்தமாக அடகு வைத்த நகைகளை திருப்ப முற்பட்டால் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும். தேர்தல் முடியும் வரை இது போன்ற கடைகள் கண்காணிப்பில் இருக்கும். அதிக அளவில் பணம் பெறுவது குறித்து கண்காணிப்பு உள்ளதால் பான் புரோக்கர், மணி லேண்டர், நகை அடகுகடை வைத்து இருப்பவர்கள் கலக்கம் அடைந்து உள்ளனர்.